கன்மலை கிறிஸ்தவ சபை
Title: கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
Date: 14:05:2017
Speaker: Brother Micheal
Worship : Brother Micheal & Brother Joshu
" கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் "
சங்கீதம் 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
இங்கே 23 ஆம் சங்கீதத்தில் தாவீது தனக்கும், கர்த்தருக்கும் உள்ள ஐக்கியத்தை பற்றி சொல்லுகிறார். கர்த்தர் தனக்கு செய்த நன்மைகளையெல்லாம் தாவீது இங்கே ஒவ்வொன்றாக சொல்லுகிறார்.
மேய்ப்பனானவன் தன் ஆடுகளை வழிநடத்துகிறவன். அவைகளுக்கு நல்ல தண்ணீரையும், ஆகாரத்தையும் தேடி அன்போடு அவைகளை நடத்திச் செல்லுகிறவன். ஆபத்து வருகிற வேளைகளில் அவைகளைப் பாதுகாப்பான். பொழுது சாய்கின்றபோது மீண்டும் அவைகளைப் பாதுகாப்பாக தொழுவத்தில் கொண்டுவந்து சேர்ப்பான். ஆடுகளும் அவன் சொல்லுக்குக் கீழ்ப்படியும்.
இரட்சிக்கப்பட்டு தேவ பிள்ளைகளாக மாறுவதற்கு முன் நமக்குள் கோபம், எரிச்சல், வைராக்கியம், பழிவாங்கும் பழக்கம், கசப்பு, பொய், பொறாமை என பல தேவையில்லாத சுபாவங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு சுபாவமும், ஒவ்வொரு மிருகத்திற்குள் இருப்பதை நாம் காணலாம்.
ஆனால் தேவன் நம்மை மேய்க்கும் மேய்ப்பராக இருக்கும் போது, நாம் ஆடுகளாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் இருந்து நாம் மாறும் போது, அவரிடம் இருந்து கிடைக்கும் ஆசீர்வாதங்கள் தடைப்படும். ஏனெனில் தேவன் நம்மை எப்போதும் அவர் மேய்க்கும் ஆடுகளாக இருக்கவே விரும்புகிறார்.
ஏனெனில் ஆடுகளில் தாழ்மையையும், கீழ்படிதலையும், தயவையும், மன்னிக்கும் தன்மையும் காண முடிகிறது. மேய்ப்பன் எந்த பாதையில் நடத்தினாலும், முறுமுறுப்பு இல்லாமல் அவரை பின்பற்றும் தன்மையையும் ஆடுகளிடம் காண முடியும்.
கர்த்தர் உங்கள் மேய்ப்பராயிருந்தால் ........
1. நீங்கள் தாழ்ச்சி அடைவதில்லை
சங்கீதம் 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
கர்த்தர் தன் ஜனங்களுக்கு மேய்ப்பராயிருக்கிறார். ஒரு மேய்ப்பர் தன்னுடைய ஆடுகளை பாதுகாத்து பராமரிப்பது போல கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்கிறார். நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளை மந்தைக்கு வழிநடத்துகிறார். தன் ஆடுகளை போஷித்து பராமரிக்கிறார். எனவேதான் தாவீது இதை அறிந்தபடியால் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். என்று விசுவாசத்தோடு உறுதியாய் சொல்லுகிறார். தாவீதுக்கு மேய்ப்பராய் இருந்த அதே கர்த்தர் இன்று நமக்கும் மேய்ப்பராயிருக்கிறார். எனவே நீங்கள் இனி தாழ்ச்சி அடைவதில்லை, உங்கள் தேவைகளை கர்த்தர் அறிந்திருக்கிறார் அதை எப்பொழுது தரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். உங்களை அவர் ஒருபோதும் தாழ்ச்சி அடைய தேவன் விடுவதில்லை. நமக்கு உயர்வை கொடுக்க அவர் தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார். எனேவ கர்த்தர் உங்கள் மேய்ப்பராய் இருக்க உங்களை நீங்கள் ஒப்புக்கொடுத்தால் நீங்கள் ஒருபொழுதும் உங்கள் வாழ்க்கையில் தாழ்ச்சி அடைவதில்லை.
2. நீதியின் பாதையில் உங்களை வழிநடத்துகிறார்
சங்கீதம் 23:3
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை நீதியின் பாதையில் நடத்துகிறார். அவர் நமக்கு நியமித்து இருக்கிற ஓட்டத்திலே நம்மை ஓடச்செய்கிறார். நம்முடைய ஆத்துமாவுக்கு எப்படிப்பட்ட வேதனைகள் வந்தாலும் கர்த்தரே நம்மை தேற்றுபவராக உள்ளார். கர்த்தர் உங்களை நீதியின் பாதையில் வழிநடத்தி உங்களுக்கு ஜெயத்தை தருவார்.
3. உன் சத்துருக்களுக்கு முன்பாக உன் பாத்திரம் நிரம்பி வழியச்செய்வார்
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
கர்த்தரைத் தன் துணையாக, பெலனாக, நம்பிக்கையாக வைத்திருப்போருக்கு, ஆவிக்குரிய வாழ்விலும், இம்மைக்குரிய வாழ்விலும் நிரம்பி வழியும் அனுபவமாகிய ஆசீர்வாத வாழ்வு உண்டு. உங்கள் சத்ருக்களுக்கு முன்பாக உங்கள் பாத்திரம் நிரம்பி வழிய நம் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை.
ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் பாதத்தில் இருந்து, ஆண்டவரால் நிரப்பப் பட்டு, ஆண்டவரோடு கூட நடக்கும் போது உங்கள் வாழ்க்கை சம்பூரணமாயிருக்கும்; நிறைவாயிருக்கும்; தேவ கிருபையினால் நிரப்பப் பட்டிருக்கும்.
ஆடுகளாகிய நமக்காக தன் ஜீவனையே கொடுத்த நல்ல மேய்ப்பன் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர் மேய்ச்சலில் நாம் கீழ்ப்படிந்து மேன்மை காணுவோமாக. ஆமென்.
No comments:
Post a Comment