கன்மலை கிறிஸ்துவ சபை
25.06.2017
" திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன் "
சங்கீதம் 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன் என்ற தலைப்பை மையமாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களை நாம் பார்க்கலாம். நம்முடைய பிதாவாகிய தேவன் என்னவெல்லாம் இந்த நாளிலே தருகிறார் என்று கேட்டால்,
1. அவர் ஆஸ்தியை தரும் தகப்பனாய் இருக்கிறார்
2. அவர் ஆகாரம் தருகிற தகப்பனாய் இருக்கிறார்
3. அவர் அன்பு செய்கிற தகப்பனாய் இருக்கிறார்
4. அவர் சந்தோஷத்தை தருகிற தகப்பனாய் இருக்கிறார்
5. அவர் ஆலோசனை தருகிற தகப்பனாய் இருக்கிறார்
1. அவர் ஆஸ்தியை தரும் தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:11
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்
லூக்கா 15:12
அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
அந்த இடத்திலே சொல்லப்படுகிறது. அந்த மகன் நன்கு அறிந்திருந்தான். உரிமையாய் தன் தகப்பனிடத்தில் தன் பங்கை கேட்கிறான். அந்த தகப்பனோ அந்தப்படியே அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். நம் எல்லோருக்கும் கர்த்தர் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தை வைத்து இருக்கிறார். அவரை நம்பி வந்த உங்களுக்கு மிகுதியான ஒரு ஆஸ்தியை பரலோகத்தில் வைத்து இருக்கிறார். ஒரு வேலை நீங்கள் ஒன்றும் இல்லாதபடி இருக்கலாம். இரவும், பகலும் தேவனை நோக்கி கண்ணீர் விட்டு அழலாம். ஒரு வேலை பூர்வீக சொத்துக்கள் பிறரிடத்தில் விற்கப்பட்டு இருக்கலாம். ஒரு வேலை நீங்கள் பிறருக்கு கொடுத்த கடன் திரும்பி வராமல் இருக்கலாம். கர்த்தர் சொல்லுகிறார் நான் உங்களுக்கு என்று ஒரு ஆஸ்தியை வைத்து இருக்கிறேன். இங்கு இளையமகன் எதற்காக கேட்டான் என்று சொன்னால் அவன் இஷ்டம் போல் வாழ்வதற்காக கேட்கிறான். எனவே தகப்பன் தன் பிள்ளை கேட்ட மாத்திரத்திலே தன் ஆஸ்தியை பங்கிட்டு கொடுத்தார். நீங்கள் எதை கேட்டாலும் கர்த்தர் உங்களுக்கு தருவார்.
2. அவர் ஆகாரம் தருகிற தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
லூக்கா 15:14
எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
லூக்கா 15:15
அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
லூக்கா 15:16
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
லூக்கா 15:17
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
லூக்கா 15:18
நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
அந்த இளையமகனுக்கு புத்தி தெளிந்தது எப்போது என்றால் குறைவு பட்ட பொழுது. அப்பா கொடுத்த ஆஸ்தி எல்லாவற்றையும் அந்த இளைய மகன் தூர தேசத்திற்கு சென்று செலவழித்து போட்டான். தன்னிடத்தில் ஒன்று குறைவு படுகிறது என்பதை அவன் அறிந்த மாத்திரத்தில் புத்தி தெளிந்தான். அவன் அப்பாவிடம் இருந்தபொழுது ஒரு ராஜாவை போல் இருந்தான். அந்த வசதிகள் அவன் அண்டி இருந்த வீட்டில் கிடைக்கவில்லை. பன்றிகள் தின்கிற தவிட்டை கூட அவனால் சாப்பிட முடியவில்லை.
இன்று கர்த்தருடைய வார்த்தையும் அப்படித்தான். கர்த்தருடைய வார்த்தை உள்ள இடத்தில் எப்பொழுதும் செழுமையும், சமாதானமும் நிரம்பி இருக்கிறது.என் தகப்பனுடைய வீட்டில் வேலை செய்கிறவர்க்கு கூட பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது ஆனால் நானோ இங்கு பசியால் சாகிறேன். என்று அந்த இளயமகனுக்கு புத்தி தெளிந்தது. இன்றைக்கு ஆவிக்குரிய மன்னாவாக இருந்தாலும் சரி, உலகத்திற்குரிய ஆகாரமாக இருந்தாலும் சரி, இங்கே வாசிக்கப்பட்ட வேத வசனத்தின் படி தகப்பனிடத்தில் ஆகாரம் மிகுதியாய் இருக்கிறது. ஆவிக்குரிய அர்த்தத்தில் அந்த தகப்பன் தன் வேலைக்காரருக்கு திருப்தியான ஆகாரம் தருவார் என்று சொன்னால் அவனுடைய மகன் திரும்பி வரும்பொழுது அவன் திருப்தியான ஆகாரம் கொடுக்க எவ்வளவு வல்லவராய் இருக்கிறார். நம் தகப்பன் ஆகாரம் கொடுக்கிற தகப்பன். அவருக்கு தெரியும் இந்த ஆட்டுக்கு எந்த ஆகாரம் கொடுக்க வேண்டும் என்று தகப்பனுக்கு தெரியும்.
3. அவர் அன்பு செய்கிற தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:19
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
லூக்கா 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
தகப்பனோ தன் மகன் எப்பொழுது வருவானோ என்று ஆவலாய் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறார். தூரத்திலே தன் மகன் வருவதை கண்ட தகப்பன் என்ன செய்கிறார் என்றால் மனதுருகுகிறார், பின்னர் ஓடுகிறார், தன் மகனை கட்டி அணைக்கிறார். பின் முத்தம் செய்கிறார். இதை எதுவும் அவன் செய்யவில்லை தகப்பன் இந்த ஐந்து விதமான காரியத்தை தன் மகனுக்கு செய்தார். இந்த அன்பு நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரிடத்தில் மாத்திரமே உள்ளது. இளைய மகன் தன் தவறை உணர்ந்து தந்தையிடம் சொல்கிறான் பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
இந்த தகப்பன் எப்பொழுதும் உன்னை நேசிக்கிறார். என்ன நடந்தாலும் அவர் நேசிப்பார் நீ மனம் திரும்பி அவர் அண்டையில் சேர்ந்தால் மட்டும் போதும் அவர் உன்னை தன் இடத்தில் அன்போடு உன்னை சேர்த்து கொள்வார்.
4. அவர் சந்தோஷத்தை தருகிற தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:21
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
லூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
லூக்கா 15:23
கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் என்று வேதம் நமக்கு தெளிவாய் சொல்கிறது. பின் தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி உயர்ந்த வஸ்திரத்தை போட்டு விட சொல்கிறார். இது தான் தன் ஊழியக்காரனுக்கு கர்த்தர் கொடுத்த கட்டளை அவன் அதை கழட்டினாலும் அவனுக்கு உடுத்திவிடு உன் வேலை அதுதான் அவன் எத்தனை முறை பாவம் செய்து உன்னிடத்தில் வந்தாலும் வஸ்திரத்தை உடுத்திவிட தன் ஊழியக்காரருக்கு ஆண்டவர் கட்டளையிடுகிறார். அவன் பரலோகத்திற்கு உரியவன். ஏனென்றால் நம் அப்பாவுடைய அன்பானது அந்த மாதிரி எஜமானுடைய வார்த்தைக்கு கீழ்ப்பட்டு அந்த ஊழியக்காரன் தன்னை தாழ்த்தி மனம் திரும்பி வந்த பாவியை பார்த்து விலை உயர்ந்த வஸ்திரத்தை கொண்டு வந்து அந்த மகனுக்கு உடுத்துகிறான்.
இந்த தகப்பன் அவன் எவ்வளவுதான் ஆண்டவருடைய சமூகத்திற்கு, திட்டத்திற்கு, செயல்பாட்டிற்கு, எதிராய் நின்றாலும் அவன் மனம் திரும்பி மன்னிப்பு கேட்ட மாத்திரத்தில் தகப்பன் ஒன்றுமே சொல்லவில்லை தன் ஊழியக்காரரை நோக்கி உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். கர்த்தருடைய வார்த்தை இவ்வாறாக சொல்கிறது அவர் நமக்கு சந்தோஷத்தை தருகிற தகப்பன். நீ ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை இருக்கிற வண்ணமாய் உன் இருதயத்தை கர்த்தரிடத்தில் ஒப்பு கொடுப்பாய் என்று சொன்னால் என் தேவனாகிய கர்த்தர் உன்னை அன்போடு அணைத்து அவர் ஊழியக்காரர் மூலமாக உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வார்.
5. அவர் ஆலோசனை தருகிற தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:24
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
லூக்கா 15:25
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு;
லூக்கா 15:26
ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
லூக்கா 15:27
அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
லூக்கா 15:28
அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
லூக்கா 15:29
அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
லூக்கா 15:30
வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
லூக்கா 15:31
அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
லூக்கா 15:32
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.
லூக்கா 15:10
அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அந்த சந்தோஷம் தான் பூமியில் அந்த தகப்பன் வீட்டில் உண்டாயிருந்தது. பரலோகத்தில் ஒரு பந்தி இருக்கு என் ஆண்டவர் நீங்கள் பரலோகத்தில் போகும்பொழுது உனக்கு கர்த்தர் முத்திரை மோதிரத்தையும், ஆட்டு குட்டியின் வஸ்திரத்தையும் உடுத்துவார். கால்களுக்கு பாத ரட்சையும் போடுவார். பாத ரட்சை என்பது கர்த்தருடைய வசனம் இந்த வார்த்தை தான் உன்னை நடத்தி பரலோகத்தில் சேர்த்தது.
இங்கே மூத்த மகன் வந்து இதென்ன என்று ஊழியக்காரனிடத்தில் விசாரிக்கிறான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். தகப்பன் அவனை வருந்தி அழைத்தான். இந்த மூத்த மகனை பார்த்தோம் என்றால் அவன் பரிசுத்தமானவன் அவன் கேட்கிறான் நான் உம் கற்பனைகளை சிறிது கூட மீறவில்லை ஆனால் எனக்கு நீங்கள் ஒரு ஆட்டு குட்டியை கூட அடிக்கவில்லை ஆனால் பாவம் செய்து தூர தேசத்தில் தன் ஆஸ்தியெல்லாம் அழித்து போட்டான் அவனுக்கு விருந்து வைக்கிறீரே இதென்ன என்று தந்தையிடம் கேட்கிறான்.
இன்று இளைய மகனை போன்று நாம் இருப்போம் என்று சொன்னால் நாம் கர்த்தரிடத்தில் ஆண்டவரே பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு விரோதமாகவும் நான் பாவம் செய்தேன் தயவாய் என்னை மன்னித்து அருளும் என்று நம்மை ஒப்பு கொடுப்போம்.
என் ஆண்டவர் உனக்காக ஆஸ்தியை தருகிறவர் உன் குடும்பத்திற்கும் ஆகாரத்தை தருகிறவர், ஆவிக்குரிய மன்னாவை பரலோகத்தில் இருந்து தருகிறவர், எப்பொழுதும் உம் நினைவாய் இருந்து உனக்கு அன்பு செய்கிறவர். தகப்பன், தாயும் கை விட்டாலும் நான் ஒரு போதும் உன்னை விட்டு விலக மாட்டேன் என்று சொன்ன தேவன் அன்பு செய்கிறவர், உனக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் எப்பொழுதும் ஏற்படுத்துபவர், எந்நாளும் உன்னை ஆலோசனை பண்ணி நடத்துகிறவர். ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: 9962 110 261
No comments:
Post a Comment