Tuesday, July 25, 2017

நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்


கன்மலை கிறிஸ்துவ சபை 
23.07.2017

நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்

செப்பனியா 3:20
அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


உன் சிறையிருப்பை கர்த்தர் திருப்புவார். அவ்வாறு உன் சிறையிருப்பை திருப்பும் பொழுது சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

யாரை கர்த்தர் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பார் ?

வேதத்திலே அநேக தாசர்களை கர்த்தர் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைத்திருக்கிறார். நாம் இன்றைக்கு மொர்தெகாய் என்பவரை கர்த்தர் எதினாலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாக  வாழ வைத்தார் என்பதை பற்றி காண்போம். 

எஸ்தர் 9:4
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

மொர்தெகாய் என்பவருடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாய் இருக்கும் படி கர்த்தர் வைத்தார். நம்மை பற்றி பிரசித்தமாய் பேசுவதற்கு ஒரு நாவும் கிடையாது. உன்னை வேண்டா வெறுப்பாக பார்த்து நடத்துபவர்கள் அநேகர் இருந்தாலும் உன்னை கர்த்தர் பார்க்கும் விதமே தனி. உன்னை மேன்மைப்படுத்தவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். உன்னை புகழ்ச்சி படுத்தவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். உன்னை கீர்த்தியோடு வாழ வைக்கவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவர் உன் சிறையிருப்பை மாற்றி சகல ஜாதிகளுக்குள்ளும் உன்னை கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் வைத்து அவர் உன்னை ஆசீர்வதிப்பார். 

மொர்தெகாய் என்பவரை கர்த்தர் கீர்த்தியும் புகழ்ச்சியமாய் வைக்க காரணம் என்ன ? அவர் அப்படி என்ன செய்தார் ?

அவர் எப்படி இருந்தார் என்பதை ஆறு விதமான காரியங்களில் நாம் இங்கு பார்ப்போம்.

எஸ்தர் 10:3
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.

1. யூதனாகிய மொர்தெகாய் - அவர் துதிக்கிறவராய் இருந்தார் 

யூதனாகிய மொர்தெகாய் யூதா என்று சொன்னாலே யூத கோத்திரத்தார் அனைவரும் தேவனை துதிக்கிறவர்கள். மொர்தெகாயிடம் இருந்த சிறந்த குணாதிசயம் என்ன என்று சொன்னால் அவர் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை துதிப்பவராய் இருந்தார். அதனால் தான் அவரை கர்த்தர் கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் வைத்தார். அது போல உன் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தேவனை துதிப்பதை மட்டும் விட்டு விடாதீர்கள். 

2.   மொர்தெகாய் யூதருக்குள்ளே பெரியவன் - அவர் தாழ்மை உள்ளவராய் இருந்தார் 

மொர்தெகாய் யூதருக்குள்ளே பெரியவனாக இருக்க காரணம் என்ன என்று கேட்டால், அவன் எல்லா இடத்திலேயும் தன்னை தாழ்த்தினார். அவருக்குள்ளே இருந்தது தாழ்மை, தாழ்மை உள்ளவர்களை கர்த்தர் உயர்த்துவார். எளியவனை அவர் புழுதியில் இருந்து உயர்த்தி ராஜாக்களோடும், பிரபுக்களோடும் உட்காரச்செய்வார். இந்த தாழ்மை குணத்தை உன் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையிலும் செயல்படுத்தி வாழ்ந்தால் இந்த மொர்தெகாயை போல் கர்த்தர் உன்னை மேன்மேலும் உயர்த்துவார்.


3. மொர்தெகாய் தேவ சித்தத்தை செய்கிறவராய் இருந்தார் 

மொர்தெகாய்க்கு சகோதரர் யாரும் இல்லை என்றாலும் தன் ஜனத்தை சகோதராக கருதினார். ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்கிறார் யார் எனக்கு தாயுமாயும், சகோதரராயும் இருக்கிறார்கள் என்றால் என் சித்தத்தை செய்பவர்களே என் தாயுமாயும், சகோதரராயும் இருக்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையிலே தேவ சித்தத்தை செய்கிறவர்களாக காணப்பட வேண்டும். நம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய வழி நடத்துதல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் கர்த்தர் உங்களை எல்லாரிலும் கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் இருப்பார். 

4. மொர்தெகாய் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவராக இருந்தார்  

மத்தேயு 3:17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து மரணப்பரியந்தம் தன்னை தாழ்த்தினார். எனவே தான் பிதாவானவர் இயேசுவை இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று சொன்னார். மொர்தெகாயும் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தபடியால் இவர் யூத ஜனங்களுக்கு பிரியமானவராய் இருந்தார் என்று இங்கே வசனத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. 

மொர்தெகாய் கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். தேவனுக்கு பிரயமானவராக அவர் வாழ்ந்தார். பிரியமான ஒரு மனிதராக வாழ்ந்தார். தேவனுடைய கட்டளைகளை இவர் தட்டாமல் எல்லா காரியத்திலும்  கீழ்ப்படிந்து அதனை செய்தார். அது போலவே நம் வாழ்க்கையிலும் கர்த்தருக்கு பிரியமாக இருக்க நாம் அவர் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நம்மை நாம் ஒப்பு கொடுத்து வாழ வேண்டும். 

5. மொர்தெகாய் நன்மை செய்பவராய் இருந்தார் 

இயேசு நன்மை செய்பவராக இருந்தது போல மொர்தெகாயும் தன் ஜனங்களின் நன்மை நாடுபவராய் இருந்தார். ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினையாமல் நல்ல மனிதராக மொர்தெகாய் வாழ்ந்தார். இவர் எல்லாருக்கும் ஓடி ஓடி நன்மை செய்பவராக இருந்தார். இந்த குணாதிசயம் இயேசுவிடத்தில் இருந்தது  அப்போஸ்தலர் 10:38 இல் அவர் நன்மை செய்கிறவராய் சுற்றி திரிந்தார் என்று வேதம் சொல்கிறது. மொர்தெகாயும் அதுபோல் தன் ஜனங்களின் நன்மையையே நாடினார்.

6. மொர்தெகாய் சமாதானம் பேசுகிறவராய் இருந்தார் 

கிறிஸ்துவ வாழ்க்கையில் உன் பேச்சு எல்லா இடத்திலேயும் சமாதானத்திற்கு ஏதுவாய் இருக்க வேண்டும். தன் குலத்தார் என்று சொல்லும் பொழுது யூதா குலத்தில் உள்ள எல்லோரிடமும் அவர் சமாதானமாய் வாழ்ந்தார்.  அது போல் நாமும் நம் வாழ்க்கையில் எல்லோரிடத்திலும் சமாதானமாய் வாழ வேண்டும். அப்படி வாழும் பொழுது கர்த்தர் மொர்தெகாயை உயர்த்தியது போல உன் பேரை பிரசித்தம் பண்ணி உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைப்பார். 

மேற்கூறிய குணாதிசயம் எல்லாம் கர்த்தர் மொர்தெகாயிடம் கண்டதால் அவரை கீர்த்தியம் புகழ்ச்சியுமாய் வைத்தார். அது போல இந்த குண நலன்களை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தி வாழ்வீர்கள் என்று சொன்னால் உங்களை கர்த்தர் எல்லா ஜனகளுக்குள்ளும் கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் வைப்பார். ஆமென்.

No comments:

Post a Comment