கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Micheal
Date: 04.02.2018
யாத்திராகமம் 15:6
கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது;
கர்த்தருடைய வலது கரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது. அவருடைய வலது கரம் தான் நம்மை அபிஷேகித்து, ஆற்றலோடும், அன்போடும் நம்மை நித்தமும் நடத்துகிறது. கர்த்தருடைய தயவான கரம் நம் மீது இருந்திராவிட்டால் நாம் எப்பொழுதோ மடிந்திருப்போம். அவருடைய கரத்தின் நன்மைகளையும், அதிசயங்களையும் நம்மால் விவரித்து சொல்ல முடியாத அளவுக்கு எல்லையற்றது. நம் தேவனின் இந்த மகத்துவமான வலது கரத்தை பற்றி இன்றைக்கு மூன்று விதமான காரியங்களில் நாம் தியானிக்கலாம்.
1. அவர் தமது வலது கரத்தினால் உன்னை தாங்குவார்
சங்கீதம் 18:35
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
அவருடைய வலது கரம் நம்மை அனுதினமும் தாங்கி வருகிறது. இன்னமும் அவர் நம்மை தாங்க வல்லவராய் இருக்கிறார். தேவன் நம்மை தாங்குவதின் முக்கிய நோக்கமே நம்மை வாழ்வின் அடுத்த நிலைக்கு கொண்டு போவது தான். இன்றைக்கு அநேகர் கர்த்தருடைய மேன்மையையும், மகத்துவத்தையும் இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். ஆனால் நாமோ இந்த கிருபையை பெற்றுள்ளோம். இது இவ்வளவு பெரிய பாக்கியம். தேவன் உங்களையும் தாங்க வேண்டுமா, உங்கள் பாரங்களை அவர் மீது இறக்கி வையுங்கள், அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். இன்னும் நீங்கள் இயேசுவை ஏற்று கொள்ளாமல் இருந்திருந்தால் ஆண்டவர் இன்றைக்கு உங்களை கரம் விரித்து அழைக்கின்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சராக ஏற்று கொள்ளுங்கள். அவர் உங்களை இரட்சித்து தாங்கி நடத்துவார்.
2. அவர் தமது வலது கரத்தினால் உன்னை இரட்சிப்பார்
சங்கீதம் 108:6
உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.
கர்த்தருடைய வலது கரம் மாத்திரமே இந்நாள் வரைக்கும் நம்மை காத்து கொண்டு வருகிறது. அநேக விதமான அற்புத அதிசயங்களை தேவன் நாம் ஜெபிக்கும் பொழுது செய்து இருக்கிறார். என்ன தான் பிசாசானவன் நம்மை சதி செய்து வாரி கொண்டு போக நினைத்தாலும் நம் தகப்பனின் வலது கரம் அதை முறியடித்து நமக்கு விடுதலை தருகிறது. அவருடைய வலது கரம் மாத்திரமே நம்மை இரட்சித்து இன்றைக்கும் நிலை நிற்க செய்கிறது.
இன்றைக்கும் அநேக விதமான காரியங்களில் நாம் சிக்குண்டவர்களாக இருக்கிறோம். அவை எதுவாக இருந்தாலும் சரி அவை எல்லாவற்றில் இருந்தும் நம்மை இரட்சித்து நம்மை விடுதலையாக்க கர்த்தர் வல்லவராய் இருக்கிறார். அவர் வலது கரம் உன்னை இரட்சிக்கும்.
இரட்சிப்பு என்று சொன்னாலே ஒரு விடுதலை, அவர் பாவத்தில் இருந்து நம்மை விடுவிக்கவே இந்த உலகத்திற்கு வந்தார். தேவனின் வலது கரம் உன்னை விடுதலை செய்யும் அது மாத்திரம் அல்ல உன்னை கொண்டும் உன் நிமித்தமாய் அநேகர் விடுதலையாக்க படுவார்கள். நீங்கள் ஜெபம் பண்ணுகிற வேளையிலே கர்த்தரின் வலது கரம் உன் மேல் வரும். நீங்கள் என்ன சொல்லி யாருக்கு ஜெபிக்கிறீர்களோ அவர்கள் விடுதலையாக்கப்படுவார்கள் உங்கள் கண்களே அதை காணும்.
3. அவர் தமது வலது கரத்தினால் உன்னை உயர்த்துவார்
அப்போஸ்தலர் 5:31
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.
அவர் வலது கரம் உன்னை உயர்த்தும் நீ எந்த இடத்தில வெட்கப்பட்டாயோ, எந்த இடத்தில அழுதாயோ, எந்த இடத்தில வேதனைப்பட்டாயோ அந்த குறிப்பிட்ட இடத்தில இருந்து கர்த்தர் உன்னை உயர்த்துவார். எகிப்து தேசத்திலே தேவன் யோசேப்பை ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அதிபதியாக உயர்த்தினார். அது போல நாமும் நம் தேவாதி தேவன், இராஜாதி இராஜனுக்கு அதிபதிகள் என்பதை நாம் மறந்து விட கூடாது. அவர் உங்களை நிச்சயமாக ஏற்ற காலத்திலே உயர்த்துவார். நீ எதிர்பார்த்திருக்கிற காரியம் எதுவாக இருந்தாலும் சரி கர்த்தர் தமது வலது கரத்தினால் அதை நடப்பித்து உங்களை ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவார். ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment