Tuesday, March 20, 2018

தேவையானது ஒன்றே


கன்மலை கிறிஸ்துவ சபை

தேவசெய்தி : Brother KAMAL

Date : 11.03.2018

" தேவையானது ஒன்றே "

லூக்கா 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

லூக்கா 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

லூக்கா 10:39
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

லூக்கா 10:40
மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

லூக்கா 10:41
இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

இந்த உலகத்தில் நாம் வாழும் நாட்களில் நாம் நமக்கென தெரிந்து கொள்ள வேண்டிய பங்கு பல இருந்தாலும் நம்மை விட்டு என்றுமே எடுபட்டு போகாத பங்கு ஒன்று இருக்கிறது, இதைத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வசனத்தின் மூலமாக நமக்கு சொல்லித்தருகிறார். இந்த பங்கானது பூமியில் இந்த வாழ்க்கை முடிந்த பின்பும் நித்தியமாக நம்மோடு கூட வரும்.
பிரசங்கி 5:18
இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு.

அப்படியானால் இந்த பங்கு பூமியில் இந்த வாழ்க்கையில் ஆசைப்படுகிற அனைத்து காரியங்களையும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவித்தாலும் இது நம் ஆயுள் வரை மட்டுமே ஆகும். நம் மரணத்திற்காக பின் பின் இவை ஒன்றில் எதுவாகிலும் நம்முடன் வாராது.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நம்முடைய நல்ல பங்கு அவர் பாதத்தில் எப்பொழுதும் தரித்திருப்பதே நல்ல பங்கு இதுவே என்றைக்கும் அழியாத நல்ல நித்திய பங்கு. 

யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற அவருடைய தாசனாகிய தாவீது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பங்கை இப்படியாய் சொல்லுகிறார். 

சங்கீதம் 142:5
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.

சங்கீதம் 119:57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

புலம்பல் 3:24
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

எனவே தேவையானது என்ன ? உலகம் முக்கியமா ? தேவன் முக்கியமா ? உலக பிரகாரமாக யோசித்த மார்த்தாளுக்கு ஆசிர்வாதம் கிடைக்கவில்லை ஆனால் இயேசுவே முக்கியம் என அவர் பாதத்தின் அருகே அவர் வார்த்தையை கேட்ட மரியாளுக்கு ஆசிர்வாதம் கிடைத்தது. 

உலகப்பிரகாரமான எல்லா தேடல்களையும் விட, எல்லா கவலைகளையும் விட தேவையானது ஒன்றே அது மரியாள் தெரிந்து கொண்ட தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அந்த பங்கு என்ன அதுவே நம் இயேசு. 

நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும், துன்பத்திற்கும், கவலைகளுக்கும் தீர்வு ஆண்டவராகிய இயேசு மாத்திரமே நாம் அவரை தேடும் பொழுது, நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கிறது. மரியாளை போல தேவனுடைய பாதத்தில் அமர்ந்து அவளுடைய ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

நம் பரிசுத்த வேதாகமத்தில் கூட நம் இயேசுவின் பாதத்தை நாடி வந்தவர்கள் பெற்று கொண்ட ஆச்ரிவாதத்தை நாம் காண்போம். 

1. இயேசுவின் பாதத்தை நாடி வருவோர்க்கு விடுதலை உண்டு

மாற்கு 7:25 வசனம் முதல் மாற்கு 7:25  வரை 

மாற்கு 7:25
அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.

இங்கே இந்த கிரேக்க ஸ்திரி தன் மகளை அசுத்த ஆவியின் பிடியில் இருந்து விடுதலை வேண்டி இயேசுவின் பாதத்தில் விழுகிறாள். இயேசு அவளை நோக்கி முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று . அதற்கு அந்த ஸ்திரியானவள் மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அந்த தாழ்மை, அந்த விசுவாசம் கண்டு ஆண்டவர் அந்த ஸ்த்ரீக்கு இறங்கி அவள் மகளுக்கு விடுதலை அளித்தார். அது போல தான் நம் என்னதான் துன்பங்கள் வந்தாலும் மனிதரை நாடாமல் இயேசுவின் பாதத்தில் காத்து கொண்ட இருந்தால் நம்  பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி நம் தேவன் அவற்றில் இருந்து விடுதலை அளிக்க வல்லவராய் இருக்கிறார். 

2. இயேசுவின் பாதம் நாடி வருவோர்க்கு மன்னிப்பு உண்டு 

லூக்கா 7:37 வசனம் முதல் லூக்கா 7:39  வரை 

லூக்கா 7:44 வசனம் முதல் லூக்கா 7:48  வரை

லூக்கா 7:38
அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

லூக்கா 7:48
அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

இங்கே பாவியான ஒரு ஸ்திரி இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் பாதத்தை முத்தம் செய்து அவருடைய பாதத்தை தன் கண்ணீரால் கழுவினால் பின் விலை உயர்ந்த பரிமள தைலத்தை அவர் பாதத்தில் பூசினாள். இயேசு அவள் இருதயத்தை பார்த்தார் அந்த ஸ்திரி தன் பாவத்தை அவர் பாதத்தின் அண்டையில் தன் கண்ணீர் வாயிலாக இயேசுவிடம் அறிக்கையிட்டாள் தேவன் அந்த ஸ்த்ரீக்கு பாவத்தை மன்னித்தார். வேதம் தெளிவாய் நமக்கு சொல்கிறது தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கையிட்டு விட்டு விடுகிறவன் தேவனிடத்தில் இருந்து இரக்கம் பெறுவான் என்கிறது. நம்முடைய பாவங்கள் அனைத்தையும் மன்னிக்க இந்த உலகத்தில் இயேசுவால் மாத்திரமே முடியும் எனவே நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து நம் பாவங்களை அவர் பாதத்தண்டையில் கண்ணீரோடு அறிக்கையிடும் பொழுது இயேசு நமக்கு மன்னிப்பு அளிப்பார்.  

3. இயேசுவின் பாதம் நாடி வருவோரின் விண்ணப்பம் கேட்கப்படும் 

I சாமுவேல் 1:11 வசனம் முதல் I சாமுவேல் 1:17 வரை 

I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

இங்கே அன்னாள் தேவனுடைய சமூகத்தில் மனம் கசந்து ஒரு பிள்ளை வேண்டி தன் இருதயத்தை ஊற்றி இஸ்ரவேலின் தேவனிடத்தில் விண்ணப்பம் செய்கிறாள். அப்பொழுது  அவள் குடித்து வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்று சொன்னார். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றார். அது போல உங்கள் விண்ணப்பங்கள் எதுவாக இருந்தாலும் சரி தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை நீங்கள் அவர் சமூகத்தில் அன்னாளை போல விண்ணப்பம் பண்ணும் பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உங்கள் விண்ணப்பத்தை கேட்டு அவை உங்களுக்கு ஆகும் படி கட்டளையிடுவார். 

4. இயேசுவின் பாதம் நாடி வருவோர்க்கு இரட்சிப்பு உண்டு 

லூக்கா 8:41
அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,

லூக்கா 8:42
தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.

லூக்கா 8:49 வசனம் முதல் லூக்கா 8:55 வரை 


இங்கே ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு தன் மகள் சுகவீனமாய் மரண அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறாள் அவளை காப்பாற்ற வேண்டி இயேசுவின் பாதத்தில் விழுந்து அவரை வேண்டி கொள்கிறார். ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். இங்கே யவீரு தன் மகளை காப்பாற்ற மனுஷரின் தயவை நாடாமல் இயேசு ஒருவரே தன் மகளை விடுவிக்க முடியும் என்று உணர்ந்தபடியால் அவர் பாதம் நம்பி வந்தார். சுற்றி இருந்தவர்கள் உன் மகள் மறித்து விட்டாள் என்று சொன்னாலும் இயேசு யவீருவுக்கு தைரியம் கூறுகிறார். அவனை தேற்றி அவன் மகளை உயிரோடு எழுப்பி இரட்சித்தார். எனவே எனக்கு அன்பானவர்களே இயேசு ஒருவரால் மாத்திரமே நம்மை இரட்சிக்க முடியும் அவரை விசுவாசித்து அவர் பாதத்தண்டையில் சேர்வோமானால் என்ன இன்னல்கள் வந்தாலும் நம் நம்மை கைவிடமாட்டார் எல்லா தீங்கிற்கும் விளக்கி காத்து நம்மை இரட்சிப்பார். 

5. இயேசுவின் பாதம் நாடி வருவோர்க்கு தேவ மகிமை வெளிப்படும்

 யோவான் 11:32 வசனம் முதல் யோவான் 11:45

யோவான் 11:32 
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.


இங்கே லாசரு மரித்த போது மரியாள் இயேசுவின் பாதத்தில் விழுந்து ஆண்டவரே நீர் இருந்திருந்தால் என் சகோதரன் மறித்து இருக்க மாட்டான் என்றாள் அப்பொழுது இயேசு அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்; இயேசு கண்ணீர் விட்டார். அப்பொழுது சுற்றி இருந்த யூதர் சிலர் குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார்.

ஆண்டவர் இவ்வாறு சொன்ன பிறகும் மார்த்தாள் அவிசுவாசமாக ஆண்டவரே இப்பொழுது நாறுமே என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்று கூறி இயேசு பிதாவை நோக்கி ஜெபித்தார் பின் லாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிட்டார் அவன் வெளியே உயிரோடு கூட வந்தான். இதை பார்த்த அநேகர் இயேசு ஏற்றுக்கொண்டார்கள். இதை போலத்தான் நம் வாழ்க்கை தேவனை விசுவாசித்து அவருடைய மகிமை நம் மூலமாய் பிறருக்கு வெளிப்படும் படியாய் நம் ஜீவியம் அமைய வேண்டும். மரியாள் அவர் பாதம் நம்பி உம்மால் முடியும் ஆண்டவரே நீர் இருந்தால் லாசரு மறித்து இருக்க மாட்டான் என்று விசுவாசத்தால் அவள் தேவனுடைய மகிமையை கண்டாள் அதுமட்டுமல்லாமல் அநேகர் அதன் நிமித்தமாய் இரட்சிக்கப்பட்டனர் நம் விசுவாச பயணம் கூட தேவ மகிமை வெளிப்படும் படியாய் இருக்க வேண்டும் அதற்கு ஒரே தீர்வு இயேசு மாத்திரமே இயேசுவை நாம் விசுவாசித்தால் அவருடைய மகிமையை காண்போம் அதன் மூலமாய் அநேகரை ஆண்டவருக்குள்ளாய் வழிநடத்தமுடியும்.


6. இயேசுவின் பாதம் நாடி வருவோர்க்கு உயர்வு உண்டு 

லூக்கா 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.


இயேசு வலையில் திரளான மீன்களை வரவைத்த அற்புதத்தை கண்டு ஆண்டவரே நான் பாவியான மனுஷன் என்னை விட்டு அகன்று போகும் என்று சொன்னான் ஆனால் ஆண்டவர் பேதுருவை இனி நீ மீன்களை அல்ல மனுஷரை பிடிப்பவனாய் இருப்பாய் என்கிறார். மேலும் பேதுரு இயேசுவின் முதன்மை சீடராக இருந்தார். இயேசு மறித்து பின் உயித்தெழுந்து பரலோகம் சென்ற பின் பெந்தகொஸ்தே நாளில் பிரசங்கம் செய்து ஆயிரம் ஆயிரம் பேர் அதன் மூலமாய் இரட்சிக்கப்பட்டனர். மேலும் பேதுரு நிழல் பட்டாலே பிறர் சுகம் ஆகும் அளவுக்கு வல்லமையாய் ஆண்டவர் பேதுருவை பயன்படுத்தினார். நீங்களும் பேதுருவை போல் அவர் பாதம் நாடி நம்மை அவர் சித்தத்துக்கு ஒப்பு கொடுத்தால் நம்மையும் ஆண்டவர் உயர்த்த வல்லவராய் இருக்கிறார். 

7. இயேசுவின் பாதம் நாடி வருவோர்க்கு வெளிப்பாடு உண்டு 

வெளி 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

வெளி 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.


வெளி 1:19
நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;

யாருக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துவார். அவர் சமூகத்தில் அவர் பாதத்தில் காத்து கொண்டு இருப்பவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துவார். இங்கு தம் ஊழியக்காரனாகிய யோவானுக்கு ஆண்டவர் வெளிப்பட்டு இனி இந்த உலகத்தில் சம்பவிக்க இருக்கிற காரியங்களை இந்த வெளிப்படுத்தின விஷேஷம் புஸ்தகத்தில் யோவானுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அது போல தான் நாம் ஆண்டவர் சமூகத்தில் அவருக்காக நாம் அவர் பாதபடியில் காத்து கொண்டு இருக்கும் பொழுது ஆண்டவர் வெளிப்படுவார் பல இரகசியங்களை வெளிப்படுத்துவார். உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்னும் வளர ஆண்டவர் உதவி செய்வார். 

எனவே எனக்கு அன்பானவர்களே இயேசு ஒருவர் மாத்திரமே நம்மை விட்டு என்றுமே போகாத நல்ல பங்கு நம் வாழ்வில் இயேசு இருந்தால் அதுவே போதும் அவர் நம்மை நடத்திடுவார். அவர் சித்தத்திற்கு நம்மை நாம் ஒப்பு கொடுப்போம் அவர் எல்லாம் பார்த்து கொள்வார் உங்களை விடுவிப்பார், உங்களை மன்னிப்பார், உங்களை விண்ணப்பத்திற்கு பதில் கொடுப்பார், உங்களை இரட்சிப்பார், தேவ மகிமையை காணச்செய்வார், உங்களை உயர்த்துவார், உங்களுக்கு வெளிப்படுவார் ஆமென். 




FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment