Wednesday, April 18, 2018

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது


கன்மலை கிறிஸ்துவ சபை

தேவசெய்தி : Brother Micheal

Date : 15.04.2018

மத்தேயு 5:10
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

மத்தேயு 5:11
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

மத்தேயு 5:12
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார். நீங்கள் எல்லோரும் துன்பப்படுகிறீர்களா, துயரப்படுகிறீர்களா கவலை வேண்டாம். சந்தோஷப்பட்டு களிகூருங்கள் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது. எப்படிப்பட்டவர்களுக்கு இந்த பலனை ஆண்டவர் வைத்து இருக்கிறார் என்பதை மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம்.

லூக்கா 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

லூக்கா 16:20
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

லாசரு ஒரு தரித்திரன் 
லாசரு பருக்கள் நிறைந்த வியாதி உடையவனாய் இருந்தான். 
லாசரு ஒரு அனாதை 

ஆனால் ஆம் வசனத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த மூன்று விதமான காரியங்களும் ஐஸ்வரியாவானிடம் காணப்படவில்லை. அவன் தரித்திரவான் அல்ல, அவன் வியாதியஸ்தன் அல்ல, அவன் அனாதையும் அல்ல. 

லூக்கா 16:21
அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

லாசரு என்ற பெயருக்கு கர்த்தர் துணை என்று அர்த்தம்.  இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து இருந்தான். லாசருவோ வஸ்திரம் இல்லாமல் இருந்தான். லாசரு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை தரிப்பித்து இருந்தான். ஆவிக்குரிய ரீதியிலே நாம் பார்க்கும் பொழுது லாசரு ஏறத்தாழ யோபுவை போலவே அவர் இருக்கிறார். லாசரு கேட்டதெல்ல்லாம் ஒன்றே ஒன்று தான் ஐஸ்வரியவானுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான். 

லூக்கா 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

நீதிமான்களுடைய மரணம் சடுதியில் இருக்கும் ஆனாலும் அது மகிமையாய் இருக்கும். லாசரு மரித்த பின் அவனை அடக்கம் பண்ண வந்தவர்கள் தேவதூதர்கள். நீ கர்த்தர் மேல் விசுவாசமாய் இருந்து அவரையே பற்றி கொண்டு சடுதியில் நீ மறித்து போவாய் என்று சொன்னால் மற்றவர்கள் உன்னை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே ஆண்டவர் தம் தூதர்களை அனுப்பி உன்னை சேர்த்துக்கொள்வார். 

ஐஸ்வரியவானுக்கு தூதர்கள் வரவில்லை அவன் மனுஷரால் அடக்கம் பண்ணப்பட்டான். லாசருவோ அப்படி அல்ல இன்றைக்கு உன் வாழ்க்கையிலும், என் வாழ்க்கையிலும் ஒரு நாள் மரணம் வரும். அப்பொழுது இந்த லாசருவை தேவதூதர்கள் கொண்டு சென்றது போல நம்மை கொண்டு செல்ல வேண்டும் . 

அங்கு வந்த தேவ தூதர்கள் லாசருவை கொண்டு போய் ஆபிரகாம் மடியில் போட்டார்கள். இந்த இடத்தில ஆபிரகாம் என்று சொல்லும் பொழுது அது இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. 

லூக்கா 16:23
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

லூக்கா 16:24
அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

லாசரு ஐஸ்வரியவானுடைய மேஜையில் இருந்து சிந்துகிற துணிக்கைகளை தான் சாப்பிட ஆசையாய் இருந்தான் ஆனால் அவனை ஐஸ்வரியவான் தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட அவனுக்கு இறங்கினது இல்லை மறுமையில் அவன் பாதாளத்தில் வேதனை படு பொழுது தான் புரிகிறது ஐயோ நாம் தவறு செய்து விட்டோமே இப்படி அக்கினியில் வேகிறோமே பின் அந்த ஐஸ்வரியவான் ஆபிரகாமை நோக்கி தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; என்று வேண்டுகிறார். 

லூக்கா 16:25
அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

இன்றைக்கு நீங்கள் தீமையை அனுபவிக்கிறீர்களா ? எல்லாருக்கும் எல்லா நன்மையும் கிடைக்கிறது நம் வாழ்க்கையிலோ எந்த நன்மையையும் இருப்பதில்லையே என்று கலங்குகிறீர்கள் ஆண்டவர் நிச்சயமாய் ஒரு நாள் உங்களுக்கு நன்மைகளை செய்வார். நீ விசுவாசமாய் காத்து இருக்கிற வேளையிலே இந்த விசுவாசியாகிய லாசருவைப்போல விசுவாசம் உள்ளவர்களாய் இருந்தீர்கள் என்றால் எல்லா தீமையையும் நன்மையாய் மாற்ற உன் தேவன் எப்பொழுதும் உன்னுடனே இருக்கிறார். 

லாசரு ஐஸ்வரியவானுடைய வாசல் அண்டையில் உட்கார்ந்து இருக்கும் வேளையில் கூட ஆண்டவரே ஏன் என் வாழ்க்கை இப்படி இருக்கிறது பருக்களை நாய்கள் நக்குகிறதே என்று கர்த்தரிடத்தில் முறையிடவும் இல்லை. லாசரு நீதியோடு வாழ்கிற வாழ்க்கையை வாழ்ந்தார், ஆகவே தான் வசனம் சொல்கிறது நீதியிலே துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். நம் தகப்பன் நமக்காக எல்லாம் வைத்து இருக்கிறார். நன்மை கிடைக்கவில்லை என்று கலங்க வேண்டாம். கர்த்தர் ஏற்ற காலத்திலே தம்முடைய பிள்ளைகளை அவர் ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

லூக்கா 16:26
அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.

லூக்கா 16:27
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

லூக்கா 16:28
நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

லூக்கா 16:29
ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

லூக்கா 16:30
அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.

லூக்கா 16:31
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

இங்கு ஐந்து சகோதரர்கள் என்று சொல்லும் பொழுது ஆவிக்குரிய அர்த்தத்தில் ஐந்து கண்டங்களை குறிக்கிறது. ஐந்து கண்டங்களுக்கு சென்று நாம் ராஜ்யத்தின் சுவிசேஷத்தை சொல்ல வேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தம். இந்த ஐந்து கண்டத்தில் வாழ்கிற மக்களுக்கு நான் மோசேயை நான் ஏற்படுத்தி வைத்து இருக்கிறேன். தீர்க்கதரிசிகளை ஏற்படுத்தி வைத்து இருக்கிறேன். முதலில் அவர்களுக்கு அவன் செவி கொடுக்கட்டும் என்று ஆண்டவர் சொல்லிவிட்டார். இந்த சத்தியத்தை என் ஆபிரகாம் சொல்லுகிறார் என்று கேட்டால் ஒரு காரணம் உண்டு.

அவர்களுக்கு சொல்ல மோசேயையும், தீர்க்கதரிசிகளை இந்த உலகத்தில் ஏற்படுத்தி வைத்து இருக்கிறேன். நீ நரகத்தில் இருக்கிறாய் உன்னாலும் போக முடியாது நான் லாசருவையும் அனுப்ப மாட்டேன். நான் அவனை தேற்ற போகிறேன். அவனுக்கு நான் இளைப்பாறுதலை தர போகிறேன். நான் சொல்ல வேண்டியதெல்லாம் நான் ஏற்படுத்தினவர்கள் சொல்வார்கள். அவர்களை சொன்னதை அவர்கள் கேட்காவிட்டால் மரித்தவன் வந்து சொன்னாலும் அவர்களை நம்பமாட்டார்கள். ஆகவே எனக்கு அன்பானவர்களே லாசருவை போல நாம் விசுவாசித்து நித்தியம் செல்வோம். ஐஸ்வரியவானின் நிலைமை நமக்கு வேண்டாம். நாம் அனைவரும் லாசரு தேற்றப்படுவது போல நாமும் ஆபிரகாம் மடியில் தேற்ற பட பிரயாசிப்போம். 




FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment