Thursday, December 8, 2016

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பார்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பார் 
Date: 20:11:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 
" கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பார் "

 சங்கீதம் 20:2
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

பரிசுத்த ஸ்தலம்  என்று சொன்னால் பரலோகம். உனக்கு ஒத்தாசை என்று சொன்னால் உனக்கு பரலோகத்தில் இருந்து உதவி அனுப்புகிறார். சீயோன் என்று சொன்னால் அவர் தங்கும் இடம். சீயோனிலிருந்து கர்த்தர் உனக்கு உதவி செய்து ஆதரிப்பார். 

1. கர்த்தர் உமது ஜெபத்தை கேட்பாராக

சங்கீதம் 20:1
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

நாம் எதற்கு சபைக்கு வருகிறோம், எதற்கு குடும்ப ஜெபம் செய்கிறோம், எதற்கு போராடி ஜெபிக்கிறோம் என்றால் கர்த்தரிடத்தில் இருந்து பதில் வரவேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் ஜெபிக்கும் பொழுது அது ஒரு வழியாக மட்டுமே இருக்க கூடாது, உன்னுடைய ஜெபத்தை கேட்கும் படியாய் இருக்க வேண்டும். கர்த்தர் உன் ஜெபத்தை கேட்பாராக என்று சொல்லும் பொழுது நாம் எப்படி ஜெபிக்க வேண்டும். உதாரணமாக வேதத்தில் ஒரு நபர் எவ்வாறு ஜெபித்து தன் வேண்டுதலுக்கு பதில் பெறுகிறார் என்று காணலாம்.

ஆதியாகமம் 32: 20 - 32  (Click to read the verse)

யாக்கோபுடைய ஜெபம் எப்படி இருக்கிறது என்றால், அவர் இரவு முதல் காலை வரை போராடி ஜெபித்தார். யாக்கோபின் வாழ்க்கையில் பார்த்தீர்களேயானால் அநேக துன்பங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்களை அவர் சந்தித்தார். எனவே எப்படியாவது என் ஜனங்கள், என் மனைவிகள், என் பிள்ளைகள், என் வேலையாட்கள் ஏசாவுக்கு முன்பதாக தப்பித்து பிழைக்க கர்த்தர் எனக்கு தயை பாராட்ட மாட்டாரா என வேண்டினார். இத்தனை வருடங்களாக எனக்கு சாபம், இழப்பு, ஏமாற்றம், என் மாமனாரிடம் இருந்து தப்பித்து எனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போய் கொண்டிருக்கிறேன். இவ்வேளையில் கர்த்தர் எனக்கு தயை பாராட்டும்படி என் சகோதரன் முன்பாக இரக்கம் செய்ய மாட்டாரோ என்று சொல்லி மிகவும் போராடி ஜெபித்தார்.
நீங்களும் அப்படிதான் கர்த்தராகிய இயேசுவிடம் ஆண்டவரே நீங்கள் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும் என்று போராடி ஜெபிக்க வேண்டும். யாக்கோபு எவ்வளவு கருத்தாய் ஜெபித்தார் பாருங்கள். இரவு முதல் காலை வரை கர்த்தரின் தூதனானவரை விடாமல் பிடித்து கொண்டார். நீங்கள் என்னை ஆசிர்வதித்தே ஆக வேண்டும் இல்லையென்றால் உங்களை போக விடமாட்டேன் என்று உறுதியாய் ஜெபிக்கிறார்.

நாம் கர்த்தரிடத்தில் ஜெபிப்பது ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள தான். நீங்கள் யாக்கோபை போல போராடி உறுதியாய் ஜெபித்தீர்களேயானால் நம் தேவனாகிய கர்த்தர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்.

2. கர்த்தர் உமது மனவிருப்பதை நிறைவேற்றுவாராக 

சங்கீதம் 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

I இராஜாக்கள் 3:5 முதல்13 வரை உள்ள வசனங்கள் 

நீங்கள் திட்டமிடுபவைகள் யாவும் நடக்க வேண்டும். விருத்தசேதனம் இல்லாதவன் திட்டம் போடுவது இந்த பூமியிலே நடக்கும் என்று சொன்னால் தேவனுடைய புத்திரர் எனப்படுகிற நீங்கள் திட்டம் போடும் எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்ற கர்த்தர் வல்லவராயிருக்கிறார். நீங்கள் திட்டம் போடுவது நடக்கும் அதுதான் உண்மை. ஏனென்றால் பிதாவாகிய தேவன் தம் பிள்ளைகள் எது கேட்டாலும் தருவார். இங்கே வசனத்தை வாசித்தோம் ஆனால் உன் மனவிருப்பதின் படி தந்தருளுவேன் என்று கர்த்தர் கூறுவதை பார்க்கிறோம். நம் தேவனாகிய கர்த்தருக்கு பிரியமானவற்றை செய்தால் நமது மனவிருப்பங்களை நிறைவேற்ற கர்த்தர் வல்லவராயிருக்கிறார்.

கர்த்தருடைய மனவிருப்பதின் படி கேட்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேளாததையும் கர்த்தர் தருவார். நீங்கள் எவற்றில் எல்லாம் பெலவீனமாக இருக்கிறீர்களோ உங்களது வேண்டுதலை கேட்டு தேவனாகிய கர்த்தர் உங்களை ஆதரித்து பெலப்படுத்துவார். இங்கு சாலொமோன் தாழ்மையாக கர்த்தரிடத்தில் வேண்டி கொள்கிறார். 

உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு அரசன் அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான். எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.

இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார். தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய். எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள். அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன்.  

3. கர்த்தர் உமது வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவாராக 

சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

மத்தேயு 8:5 முதல்10 வரை உள்ள வசனங்கள் 

நூற்றுக்கு அதிபதி தன்னை தாழ்த்தி வெறுமையாக்கி இயேசுவிடம் வேண்டுதல் செய்கிறார்.இயேசு அந்த அதிபதியின் தாழ்மையையும், விசுவாசத்தையும் கண்டு அவருக்கு பிரதியுத்தரமாக உன் விசுவாசத்தின் படியே ஆகக்கடவது உன் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று சொல்கிறார். 

இங்கே அந்த நூற்றுக்கு அதிபதி அதிகாரமாய் கேளாமல் தாழ்மையாய் வேண்டி கேட்கிறார். கர்த்தர் அவர் வேண்டுதலை நிறைவேற்றுகிறார் அது போலவே இந்த நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம் உங்களுக்குள் இருக்கும் என்று சொன்னால் கர்த்தர் உன் வேண்டுதலை நிறைவேற்றுவார்.

4. கர்த்தர் உமது காணிக்கையை பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக 

சங்கீதம் 20:3
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. 


காணிக்கைகளை கர்த்தர் பிரியமாய் ஏற்றுக்கொள்வார், உண்மையிலேயே ஒரு பரிசுத்தவான் காணிக்கையை ஏற்றுக்கொண்டு அதை பயன்படுத்தும் போது உங்கள் மேல் ஆசிர்வாதம் கடந்து வரும். அந்த காணிக்கையை அவர் ஊழியத்திற்கு பயன்படுத்தும் பொழுது கர்த்தர் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். நீங்கள் காணிக்கைகளை பிரியமாய் செலுத்தும் பொழுது கர்த்தர் உங்களை இன்னுமாய் ஆசீர்வதிப்பார். 

இதற்கு உதாரணமாக வேதத்தில் ஒரு சம்பவத்தை காணலாம் இங்கு இரண்டு விதமான காணிக்கையை கர்த்தருக்கு கொண்டு வருகிறார்கள் அதை பற்றி பாப்போம். காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை என்றால் அவன் ஏனோவென்று தன் நிலத்தின் கனிகள் சிலவற்றை கொண்டுவந்து செலுத்தினான். ஆனால் ஆபேலோ தனது மந்தையில் இருந்து கொழுமையான தலையீற்றுகள் சிலவற்றை கொண்டு வந்தான் கர்த்தர் அதனை அங்கீகரித்தார். ஆபேலை போல இது நாள் வரை நீங்கள் செலுத்திய காணிக்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார், இனி கர்த்தருக்கு பிரியமாய் நீங்கள் தரப்போவதையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

No comments:

Post a Comment