Friday, January 27, 2017

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள் 
Date: 15:01:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள் 

லூக்கா 2:37
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.

உபவாசத்தின் உண்மையான நோக்கம் என்ன? உபவாசம் என்றால் என்ன? உபவாசத்தின் பொழுது எப்படி இருக்க வேண்டும்? உபவாசத்தின் பொழுது நீங்கள் என்ன பேச வேண்டும்? உபவாசத்தின் பொழுது நீங்கள் எப்படி நடக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்பது எல்லாமே நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

உபவாசத்தின் பொழுது ஜெபத்திலே தரித்திருக்க வேண்டும் 

மத்தேயு 17:21
இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

உங்களது வீட்டிலே ஒரு சில போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறதா? உடனே அதனை மேற்கொள்ள உபவாசம் இருங்கள். தேவனுக்கும், உங்களுக்கும் உள்ள ஐக்கியத்தை பெலப்படுத்துங்கள். உபவாசத்தின் பொழுது நீங்கள் ஜெபத்தோடு இருக்க வேண்டும். உங்களின் அன்றாட பணிகளை உபவாச காலத்திலே செய்யாமல் தேவனுடைய சமூகம் முன்பதாக ஜெபத்திலே தரித்திருங்கள்.

உபவாசத்தின் பொழுது வேதத்தை வாசிக்க வேண்டும் 

எரேமியா 36:6
நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.

உபவாச நாளிலே நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் வேதத்தை வாசிக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளோர் யாவரும் கேட்கும் படியாக நீங்கள் வேதத்தை வாசிக்க வேண்டும். நீங்கள் வாசித்து கொண்டு இருக்கும் அந்த தருணத்திலே ஆவியானவர் தன்னுடைய கிரியைகளை நடப்பிப்பார். 

உபவாசத்தின் பொழுது நீங்கள் தேவனை ஆராதிக்க வேண்டும் 

அப்போஸ்தலர் 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

உபவாச நாளிலே ஜெபிப்பது, வேதம் வாசிப்பது மட்டும் அல்லாமல் நாம் கர்த்தரை ஆராதனை செய்ய வேண்டும் இந்த மூன்று காரியங்கள் உபவாசம் இருக்கும் பொழுது அவசியமாக செய்ய வேண்டியவைகள். உபவாசம் இருக்கும் பொழுது கர்த்தர் உங்களிடையே நிறைய பேசுவார். ஏன் என்றால் அவயங்கள் முழுவதும் உபவாசத்தின் பொழுது பரிசுத்தம் ஆக்கப்படுகிறது.

உபவாசத்தின் பொழுது நாம் கைக்கொள்ள வேண்டிய ஏழுவிதமான காரியங்களை இங்கு நாம் காணலாம்.

1. ஆவியானவர் வழி நடத்துதல் படி உபவாசிக்க வேண்டும் 

மத்தேயு 4;1
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

மத்தேயு 4;2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

ஆவியானவர் உங்களுக்கு உணர்த்தும் பொழுது அதனை தட்டி கழிக்காமல் உடனே உபவாசம் இருக்க வேண்டும். கர்த்தர் உங்களுக்கு உபவாசத்திற்காக நியமிக்கும் நாட்களில் பசியும், சோர்வும் அறவே இருக்காது. உங்களுக்குள்ளே ஆனந்த களிப்பின் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் எதை செய்தாலும் தெளிவாய் செய்வீர்கள் இங்கு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு தான் அவருக்கு பசி உண்டாயிற்று. உபவாச நாட்களில் உங்களுக்கு தேவையான பெலத்தை கர்த்தர் உங்களுக்கு தருவார். 

2. தீர்மானித்து உபவாசிக்க வேண்டும் 

யோவேல் 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்

II கொரிந்தியர் 11:27
பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

இத்தனை நாள், இத்தனை மணி என்று தீர்மானித்து உபவாசிக்க வேண்டும். அந்த வேளையிலே வேறு எந்த வழக்கமான பணிகளை செய்யாமல் நான் கர்த்தருக்காக அவருடைய சமூகத்தில் உபவாசத்தில் தரித்திருப்பேன் என்று நீங்கள் தான் நியமிக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கின்ற போராட்டம் நீங்க வேண்டும் என்றால் நீங்கள் தான் உபவாசத்தை நியமிக்க வேண்டும். ஆவியானவரின் நடத்துதலோடு ஒரு நாளை உபவாசத்திற்காக நியமிக்க வேண்டும்.

3. உபவாசத்தினால் பெருமை இராதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும் 

லூக்கா 18:10
இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

லூக்கா 18:11
பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

லூக்கா 18:12
வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

உபவாசத்தில் இருக்கும் பொழுது நான் உபவாசத்தில் இருக்கிறேன் என்று எல்லோரிடமும் பெருமையாக பேசி கொண்டிருக்க கூடாது. ஆண்டவருக்கும், உங்களுக்கும் மட்டும் தெரிந்தால் போதும். வீட்டில் உள்ளோர் கேட்கும் பொருட்டு நான் ஆண்டவரிடம் உபவாசம் இருக்கிறேன் என்று மட்டும் சொல்லி மேற்கொண்டு அதை பற்றி பேச வேண்டாம். உபவாசம் என்று சொன்னாலே நம்மை தாழ்த்துவது தான். தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். உங்களை வெறுமை ஆக்க வேண்டும். இயேசுவை மட்டுமே மகிமை படுத்த வேண்டும். என்ன தடைகள் பிசாசு கொண்டு வந்தாலும் அவை எல்லாவற்றையும் மேற்கொண்டு ஜெயம் எடுக்க வேண்டும். 

4. இச்சைகளின் நிமித்தம் உபவாசிக்கக்கூடாது 

ஏசாயா 58:3
நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

ஏசாயா 58:4
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்

உபவாசம் என்பது ஆத்துமாவை ஒடுக்குவது. உபவாசம் இருக்கும் பொழுது இச்சைகளின் நிமித்தம் உங்கள் வழக்கமான செயல்களை செய்யக்கூடாது. உபவாசம் செய்தால் அதற்கான முறையோடு உபவாசியுங்கள். அவ்வாறு இல்லை என்றால் உபவாசம் இருக்காமல் இருப்பது நல்லது. 

5. பாவத்தில் இருந்து கொண்டு உபவாசிக்க கூடாது 

எரேமியா 14:10
அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார், ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.

எரேமியா 14:11
கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.

எரேமியா 14:12
அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.

உபவாசம் நீங்கள் ஒரு இடம் தங்காமல் சுற்றி கொண்டிருந்தால் அது கர்த்தருக்கு பிரியமாய் இருக்காது. அதை கர்த்தர் விரும்புவது இல்லை. அவருடைய சமூகத்தில் காத்திருக்க  வேண்டும். உபவாச நாள் என்பது ஒரு விசேஷித்த நாள் எனவே பாவத்தில் இருந்து கொண்டு நீங்கள் உபவாசம் செய்ய வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

6. விசுவாசித்து உபவாசிக்க வேண்டும் 

யோனா 3:4
யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.

யோனா 3:5
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

யோனா 3:6
இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.

யோனா 3:7
மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,

யோனா 3:8
மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.

யோனா 3:9
யாருக்குத்தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.

யோனா 3:10
அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

யோனா 4:10
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

உபவாசம் செய்யும் பொழுது உங்களுடைய விசுவாசம் பெருகும். தேவனை விசுவாசித்து உபவாசிக்க வேண்டும். நாமும் மனம் திரும்பி தேவனிடத்தில் மன்றாடி விசுவாசத்தோடு உபவாசித்தால் அவர் நம் மேல் மனதுருகி நம் தீங்குகளை எல்லாம் முறி அடிப்பார். 

7. உபவாச நாளை விசேஷித்த நாளாக நியமிக்க வேண்டும் 

யோவேல் 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

எனவே உபவாச நாளை விசேஷித்த நாளாக நியமித்து இருங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். 

No comments:

Post a Comment