கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே
Date: 22:01:2017
Speaker: Brother Micheal
Worship : Brother Micheal & Brother Joshua
II சாமுவேல் 5:2
சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
உன் குடும்பத்தை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திக்கொண்டு வருபவரும் அவரே, இந்த ஊழியத்தை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திக்கொண்டு வருபவரும் அவரே, கர்த்தர் தாமே உன்னை நடத்துகிறார். எல்லாவற்றுக்கும் தலைவராய் இருப்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே, சவுலை கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாக்கினார் ஆனாலும் இஸ்ரவேலை ஆதி முதல் கொண்டு நடத்தினவரும் இப்பொழுது நடத்தி கொண்டு வருபவரும் கர்த்தர். நம் தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்து அருமையாய் நம்மை வழிநடத்துபவர் அவரே.
இஸ்ரவேல் ஜனங்கள் அநேக விதமான பாடுகளை எகிப்திலே பட்டார்கள். எகிப்தியர்கள் இஸ்ரவேலை ஆளும் படியாய் அவர்கள் மேல் அநேக விதமான நுகங்களை செலுத்தி, அநேக விதமான பாடுகளின் நிமித்தமாய் பல வேலைகளை கொடுத்து, உணவு குறைவாய் கொடுத்து, உபத்திரவத்திலே அவர்கள் பல வருடங்களாய் அடிமையாய் இருந்து வந்தார்கள். ஆனாலும் அவர்களை மீட்கும் படியாய் கர்த்தருடைய கரம் அவர்கள் மேல் வந்தது. இஸ்ரவேலருடைய கூக்குரல் கர்த்தருடைய சமூகத்திலே எட்டின பொழுது அவர்களை நினைத்தருளினார்.
1. கர்த்தர் உன்னை பெலப்படுத்தி வழி நடத்துவார்
யாத்திராகமம் 15:13
நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.
கர்த்தர் கிருபையினால் நம்மை மீட்டு அழைத்து வந்தார். அதோடு மட்டும் அல்லாமல் அவருடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக பெலத்தினால் வழிநடத்தினார். இன்னமும் நம்மை பெலப்படுத்தி வழிநடத்த கர்த்தர் வல்லவராயிருக்கிறார். வாழ்க்கையிலே பெலவீனம் போல காரியங்கள் நடந்திருக்கலாம் ஒரு வேலை உங்கள் உடலே பெலவீனமாக இருக்கலாம், நம் சூழ்நிலைகள் பெலப்படுத்த முடியாதவைகளாக இருந்திருக்கலாம், வாழ்க்கையிலே பெலப்படுத்தி அடுத்த காரியத்தை செய்வதற்கு கூட வழி இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் கர்த்தர் இன்றைக்கு சொல்லுகிறதாவது நான் உன்னை பெலப்படுத்தி வழிநடத்துவேன்.
யாத்திராகமம் 16:28
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?
யாத்திராகமம் 16:29
பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
யாத்திராகமம் 16:30
அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
யாத்திராகமம் 16:31
இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்;
மன்னா என்று சொன்னால் இந்த கிருபையின் நாட்களிலே வார்த்தை என்பதாகும். இந்த வார்த்தை தான் ஆவிக்குரிய மன்னா, வார்த்தையானது நம்முள் கிரியை செய்யும் பொழுது அதன் பலன் மிகுதியாய் இருக்கும். இந்த வார்த்தையானது புறப்பட்டு செல்லும் பொழுது அற்புதங்கள் நடக்கும்.
I பேதுரு 5:10
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
கொஞ்ச காலம் தான் இந்த பாடுகள் ஆனாலும் கர்த்தர் சொல்லுகிறார் உன்னை சீர்படுத்துவேன், எந்த இடத்திலே நீ தடங்களாய் நிற்கிற, எந்த இடத்திலே ஆவிக்குரிய வாழ்க்கையிலே பெலவீனமாக இருக்கிற என எல்லா இடத்திலேயும் அவர் சீர்படுத்துவார். பிறகு உனக்கு தைரியம் கொடுத்து ஸ்திரப்படுத்துவார், பின் பெலப்படுத்தி நம்மை நிலை நிறுத்துவார்.
II தீமோத்தேயு 4:17
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
சாதாரணமாக எல்லாம் பிரசங்கிக்க முடியாது அதற்கும் தைரியம் வேண்டும். ஆனால் கர்த்தர் இந்த இடத்திலே சொல்கிறார் உன்னை பெலப்படுத்தி வழி நடத்துவார்.
2.கர்த்தர் உன்னை சுமந்து கொண்டு வழி நடத்துவார்
உபாகமம் 1:13
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டுவந்ததைக் கண்டீர்களே.
உங்களுக்கு உபத்திரவம் வந்த முதல் கொண்டு இருந்தே தேவனாகிய கர்த்தர் நம்மை சுமந்து கொண்டு வந்தார். ஒரு தகப்பன் பிள்ளையை சுமப்பது போல கர்த்தர் நம்மை சுமந்து கொண்டு வருகிறார்.
லூக்கா 10:30
இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
லூக்கா 10:31
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
லூக்கா 10:32
அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
லூக்கா 10:33
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
லூக்கா 10:34
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
இந்த இடத்திலே சமாரியன் என்று சொல்லும் பொழுது அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறதாய் இருக்கிறது. அவர் கரத்தில் நாம் இருந்தாலே கிருபை தான். இந்நாள்வரையிலும் நம்மை சுமந்து கொண்டு வருபவர் அவரே, நாமும் இதே போலத்தான் குற்றுயிராக இருந்தோம் ஆனால் இயேசு கிறிஸ்து நம்மை சுமந்து நம்மை பெலப்படுத்தி இந்நாள்வரையும் வழி நடத்தி வருகிறார்.
3. கர்த்தர் மரண பரியந்தம் உன்னை வழி நடத்துவார்
சங்கீதம் 48:14
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
தேவனாகிய கர்த்தர் நம்மை எப்படி நடத்துவாராம் மரண பரியந்தம் முதல் நம்மை வழி நடத்துவார். தேவன் சதா காலமும் உன்னை நடத்துவார். நித்தியத்திலும் உன்னை நடத்துவார்.
ஏசாயா 30:21
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவார். இது சரி இது தவறு என்று ஆவியானவர் உங்களுக்கு உணர்த்தி வழி நடத்துவார். ஆமென்.
No comments:
Post a Comment