Tuesday, February 28, 2017

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
Date: 5:02:2017
Speaker: Brother Micheal

யோவான் 1:6
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.

யோவான் 1:7
அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.

யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

நானே வழி என்று சொல்லும் பொழுது அநேக ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கன்னியின் வயிற்றிலே பிறந்து பூமியிலே அவதரித்தார். யோவான் சுவிசேஷ புஸ்தகத்திலே இயேசு கிறிஸ்து சொல்கிறார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று, இந்த இடத்திலே நானே வழி என்று சொன்னால் ஆதியாகமத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து நாம் பார்க்க போகிறோம்.



ஏதேன் என்று சொன்னால் எதற்கு ஒப்பாயிருக்கிறது என்று சொன்னால் அது பரலோகத்திற்கு நிகராயிருக்கிறது. ஏதேனில் ஆண்டவர் மனிதனை தன்னுடைய மகிமையினால் படைத்தார். புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அத்தி மரத்தை பார்த்து சபிக்கிறார், இதில் ஒரு ஆழமான காரியம் இருக்கிறது. ஆதாமும், ஏவாளும் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி அத்தியிலைகளை தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுக்கு மகிமையின் ஆடையை உடுத்தியிருந்தார். விலக்கப்பட்ட கனியை புசித்ததால் அவர்கள் தங்கள் மகிமையை இழந்தனர். எனவேதான் அத்தி மரத்தை காணும் பொழுது ஏதேன் தோட்டத்திலே நடந்த சம்பவம் அவர் நினைவு கூர்கிறார். 
ஆண்டவர் ஏதேன் தோட்டத்திலே மனுஷனை வைத்ததன் நோக்கம் மகிமையின் சரீரத்தோடு அவர்கள் உலாவ வேண்டும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்று தான் ஆனால் இந்த சர்ப்பமானது தந்திரமாய் அவர்களை வஞ்சித்து அவர்களை நாசம் செய்து அவர்களுக்கு தேவனோடு இருந்த ஐக்கியத்தை கெடுத்து விட்டது. 

ஆதியாகமம் 3:24
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து தேவனுடைய பிரசன்னத்தை இழந்தனர். இதன் நிமித்தமாய் கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு அவர்களை அனுப்பிவிட்டார். மறுபடியும் அவர்கள் அங்கு வராத படிக்கு காவல் வைக்கப்பட்டது. கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கும் தகுதியை இழந்து , அவர்கள் தங்கள் மகிமையை இழந்ததால் ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியை அடைத்து விட்டார். அதோடு மட்டும் அல்லாமல் அதனை காவல் செய்ய கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

ஏதேன் தோட்டத்துக்குள் நுழைய வேண்டும் என்றால் காவலாயிருக்கிற கேருபீன்களுக்கும், சுடரொளிப்பட்டயத்திற்கும் ஒரு பரிசுத்த பலி தேவை அங்கு போக வேண்டுமானால் அந்த காவலுக்கு மிகவும் தகுதியான பரிசுத்தமான பலி வேண்டும். 

நம்முடைய இயேசு கிறிஸ்து நம் மேல் வைத்த அன்பின் நிமித்தமாய் ஒரு பாவமும் செய்யாமல் மரணப்பரியந்தம் வரை தன்னை தாழ்த்தி சிலுவைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். பரலோகத்திற்கு செல்லும் வழியில் காவலுக்கு இயேசு கிறிஸ்து தன்னையே பாவ நிவாரண பலியாய் தந்தார். அந்த காவல் விலகியது. பரலோகம் திறக்கப்பட்டது எனவே தான் இயேசு சொல்கிறார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்கிறார். ஆம் நம் ஆண்டவராகிய இயேசுவே பரலோகத்திற்கு செல்லும் வழியாய் இருக்கிறார். அவரை அன்றி நமக்கு நிதியம் கிடையாது. 

ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

ஆதியாகமம் 22:2
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

இந்த வசனங்கள் அப்படியே இயேசுவுக்கு பொருந்தும், இயேசு கிறிஸ்து ஞானஸ்னானம் பெற்றவுடன் கர்த்தருடைய ஆவியானவர் புறாவைப்போல் இறங்குகிறார். அப்பொழுது பிதாவாகிய தேவன் என்ன சொல்கிறார் என்றால் இவர் என்னுடைய நேச குமாரன் என்று சொல்கிறார். அன்றைக்கும் கர்த்தர் ஆபிரகாமை நோக்கி உன் நேச குமாரனை நான் சொல்லும் இடத்தில பலியிடு என்கிறார். 
யோவான் 1:29
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

இந்த ஆட்டுகுட்டிதான் மோரியா மலையில் ஒரு புதரின் முட்ச்செடியில் பிதாவாகிய தேவன் ஈசாக்கை கொல்ல கூடாதபடிக்கு ஒரு ஆட்டுக்குட்டியை அங்கே சிக்க வைக்கிறார். ஆண்டவர் இந்த இடத்திலே சொல்ல வருவது என்னவென்றால் ஒரு ஆட்டுக்குட்டியானவர் பிறப்பார் அவர் தான் இந்த உலகத்தை இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். ஆபிரகாமுக்கு தேவன் தெளிவு படுத்துகின்றார். அப்பொழுது முட்ச்செடியில் சிக்கியிருந்த அந்த ஆட்டு குட்டியை ஆபிரகாம் பலியிடுகிறார்.

அந்த குட்டியின் தீர்க்க தரிசனம் யோவானுக்கு தெரிந்தபடியால்தான் அவர் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்கிறார். எனவே தான் இயேசு சொல்கிறார் எதற்கும் கவலை படாதீர்கள் உங்களுடைய மொத்த பாவத்திற்கும் நான் தான் பலியாக போகிறேன் என்னை விசுவாசியுங்கள் நானே வழி நான் உங்களை நிச்சயமாக பரலோகத்தில் சேர்ப்பேன் என்று கூறினார். இயேசு சிலுவையில் பலியான பொழுது மேல் இருந்து திரை கீழ்மட்டமாய் பிரிந்தது. தேவகுமாரன் சிலுவையில் பலியாகி விட்டார். அவருடைய பரிசுத்த இரத்தம் சிந்தப்பட்டு விட்டது. 

இயேசு பரிசுத்தராய் பிறந்து, வாழ்ந்து பாவநிவாரண பலியாய் தன்னை ஒப்புக்கொடுத்தார் நீண்ட காலமாக மூடியிருந்த அந்த பரலோகத்தின் கதவுகளை திறந்துவிட்டார். ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்ட அந்த காவல் இயேசுவின் மூலமாய் நீக்கப்பட்டுவிட்டது. நாம் எல்லோரும் இப்பொழுது ஏதேன் தோட்டத்திற்கு செல்ல பாத்திரவான்களாய் இருக்கிறோம். பிதா தன் ஏகசுதனான ஒரே பேரான தன் குமாரனை இந்த உலகத்திற்கு தந்தருளினார். நாம் நித்தியத்தை அடைய கர்த்தர் ஜீவா பலியாய் கிரயம் செலுத்தி இன்றைக்கு நாமும் பிதாவுக்கு முன்பதாக நிற்பதற்கு பாத்திரவானாய் மாற்றப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அந்த இரத்தத்தினாலே நம்மை இயேசு மீட்டுக்கொண்டார்.

இயேசு என்ற நாமம் மாத்திரமே பரலோகத்தில் உள்ளே நாம் பிரவேசிக்க கூடிய வழியாய் இருக்கிறது. ஆகவே அன்பானவர்களே இயேசு ஒருவர் மட்டுமே நம் பாவங்களை போக்கி அதில் இருந்து நம்மை விடுவிக்க முடியம். இயேசு ஒருவர் மட்டுமே நம் சகல நோய்களையும், சாபங்களையும் நீக்கி விடுதலை அளிக்க முடியும். இயேசுவின் நாமம் மாத்திரமே நித்திய இளைப்பாறுதலை அளிக்க முடியம். 

இயேசு ஒருவரே பரலோகத்திற்கு செல்லும் வழி அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை நித்தியத்திலே சேர்ப்பார். இந்த தேவ செய்தியை வாசித்து கொண்டிருக்கும் உங்களையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் அன்பான மனதுருக்கத்தின் கரம் நீட்டி உங்களை அழைக்கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே இயேசு உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். எனக்கு யாருமே இல்லை என்று கலங்குகிறீர்களா? நான் இருக்கிறேன் என்னிடம் வா மகனே மகளே என்று உங்களை இயேசு அழைக்கிறார். அவரே வழி, அவரே சத்தியம், அவரே ஜீவன், அவரே உங்கள் மீட்பர் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். இயேசு உங்களை ஆசிர்வதிக்க ஆவலாய் இருக்கிறார். அவர் உங்களை நேசிக்கின்றார். இயேசு அழைக்கிறார் வாருங்கள் அன்பானவர்களே, அவர் உங்கள் கண்ணீரை துடைப்பார். ஆமென். 

No comments:

Post a Comment