கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்
Date: 12:02:2017
Speaker: Brother Micheal
Worship : Brother Micheal & Brother Joshua
நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்
யாத்திராகமம் 17:6
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்;
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு கூட இன்றைக்கும் நிற்கிறார். அவர் நிற்பதினாலே தான் நாம் இன்றைக்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு முக்கியமான தேவை என்ன என்று சொன்னால் அது தாகம். இதன் நிமித்தமாக மோசேயை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவர்கள் மோசேயை முறுமுறுத்தார்கள், அவருக்கு விரோதமாக செயல்பட்டு அவரை சாகடிக்க திட்டம் தீட்டினார்கள்.
மோசே தேவனுடைய சமூகத்திலே சேர்ந்து நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தேவனிடத்தில் மன்றாடின பொழுது கர்த்தர் மோசேக்கு சொன்ன வார்த்தையின் விவரமாவது. நீ போ ஒரேபிலே நான் உனக்கு முன்பாக கன்மலையின் மேல் நிற்பேன். அந்த தேவன் நம்மோடு கூட இன்றும் இருக்கிறார்
யாத்திராகமம் 17:5
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
யாத்திராகமம் 17:6
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
யாத்திராகமம் 17:7
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
கர்த்தரை இஸ்ரவேல் ஜனங்கள் சோதித்தார்கள் கர்த்தர் நமக்கு தண்ணீர் தருவாரா? மாட்டாரா? என தங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணி கொண்டிருந்தார்கள் . மோசேயிடம் முறையிட்டார்கள், கர்த்தர் மோசேயை நோக்கி நீ இஸ்ரவேல் மூப்பர் சிலரை கூட்டி கொண்டு, நதியை அடித்த கோலை எடுத்து கொண்டு உன் ஜனங்களுக்கு முன்பாக போ அங்கே ஒரேபிலே உனக்கு முன்பாக நான் கன்மலையின் மேல் நிற்பேன் என்று சொன்னார்.
இன்றைக்கும் நாம் ஒரு தாகத்தோடு தான் சபைக்கு வருகிறோம். எதோ ஒரு தேவை நிமித்தம் நாம் சபைக்கு வருகிறோம். ஒரு வாஞ்சையோடு, ஒரு தாகத்தோடு வருகிறோம். கன்மலை கிறிஸ்து சொல்கிறார் நீ கன்மலையை அடி அப்பொழுது அதில் இருந்து தண்ணீர் புறப்படும் என்று சொல்லுகிறார். இன்றைக்கும் கூட கர்த்தர் கன்மலையின் மேல் நின்றதை பற்றி மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம்.
1. கர்த்தர் உங்களை கன்மலையின் மேல் உயர்த்துவார்
சங்கீதம் 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
ஏன் நம் தேவனாகிய கர்த்தர் கன்மலையின் மேல் நின்றார் என்று சொன்னால் அவர் நம்மை உயர்த்தும்படிக்கு நின்றார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவை என்று சொன்னால் தாகம், எங்களை இந்த வனாந்திரத்திலே சாகடிக்கவா எகிப்து தேசத்திலிருந்து எங்களை கூட்டிக்கொண்டு வந்தாய் என்று அவர்கள் மோசேயிடம் முறையிட்டார்கள். அப்பொழுது மோசே தேவனிடத்தில் மன்றாடின பொழுது கர்த்தர் அந்த கன்மலையின் மேல் நின்றதன் காரணம் உன்னை உயர்த்தும் படி.
உங்களுக்கு உயர்வு தேவை அந்த உயர்வை கர்த்தர் உங்களுக்கு தருவார். அது எந்த காரியமாக இருந்தாலும் சரி கர்த்தர் உங்களை உயர்த்துவார் நீங்கள் எந்த இடத்திலே மட்டுப்படுத்த பட்டீர்களோ அப்பொழுது தான் உயர்வு என்ற தாகம் ஏற்படுகிறது. கன்மலையின் தேவன் உங்களுக்கு நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கிற உயர்வை கொடுப்பார். இன்றைக்கு எந்த இடத்திலாவது தோற்று போயிருக்கலாம் கர்த்தர் கன்மலையின் மேல் நின்றதன் நோக்கம் உங்களை உயர்த்தும்படி
இன்றைக்கு அநேக விதமான சத்ருக்களின் கிரியைகளின் போராட்டம் என்னவென்று சொன்னால் உன்னை எப்படி யாகிலும் அந்த பர்வதத்திலே உயர்த்த கூடாதபடிக்கு பல்வேறு விதமான தடைகளை பிசாசானவன் கொண்டு வந்தாலும், இந்த உலகத்தின் லோகாதிபதி உங்களை பட்சித்து போகாத படிக்கு எல்லாவற்றுக்கும் உங்களை மறைத்து தன்னுடைய செட்டையில் மறைத்து வைத்து கன்மலையின் மேல் உங்களை உயர்த்துவார்.
நீங்கள் எதிர்பார்த்திராதம், நீங்கள் நினைத்து பார்க்காத வகையில் உங்களை உயர்த்துவார். இங்கு தீங்கு நாள் என்று சொல்லும் பொழுது பிசாசு உன்னை கொள்ளை பொருளாய் உயிரை கொண்டு போவது, ஆனாலும் கர்த்தர் பிசாசானவன் உன் பிராணனை அவன் வாங்காத படி உன்னை மறைத்து கூடார மறைவில் மறைத்து உங்களை கன்மலையின் மேல் உயர்த்துவார். தாழ்த்த படுகிற யாவரையும் உயர்த்த கர்த்தர் வல்லவராயிருக்கிறார்.
I கொரிந்தியர் 10:4
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
இந்த இடத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு வருகிறது. அன்றைக்கு இஸ்ரவேல் குடித்தது அது ஒரு ஞான பானம். அன்றைக்கு அதை அவர்களுக்கு கொடுத்தவர் கன்மலையாகிய இயேசு கிறிஸ்து
I பேதுரு 5:6
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
ஏற்ற காலம் வரும் விழ ஒரு காலம் இருந்தால் எழுந்து நிற்க ஒரு காலம் நிச்சயம் உண்டு. ஏற்ற காலத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் உயர்த்துவார். கன்மலையின் தேவன் உங்களை உயர்த்துவார்.
2. கர்த்தர் உங்களை கன்மலையின் மேல் நிறுத்தி உங்கள் அடிகளை உறுதிப்படுத்துவார்
சங்கீதம் 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
பாவம் என்னும் உளையான சேற்றிலே நாம் சிக்கி இருக்கும் பொழுது அவருடைய கரம் நம்மை தூக்கி எடுத்து நம்முடைய கால்களை கன்மலையின் மேல் நிறுத்தி அவர் நம் அடிகளை உறுதிப்படுத்துகிறார். கர்த்தர் நம் கால்களை கன்மலையின் மேல் உறுதிப்படுத்தி நிறுத்துகிறார். அவர் நம் அடிகளை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நாம் நடப்பதற்கு கிருபை பாராட்டுகிறார். உங்களை தூக்கி எடுத்து கன்மலையின் மேல் நிறுத்துவார். எப்பேர்ப்பட்ட காரியங்களில் நீங்கள் விழுந்திருந்தாலும் சரி கர்த்தர் சொல்லுகிறதாவது உங்களை மீண்டும் பழைய நிலைக்கு கர்த்தர் உங்களை நிறுத்துவார்.
3. கர்த்தரே நம் இரட்சிப்பின் கன்மலை
சங்கீதம் 89:26
அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
ரூபனின் கண்களில் யோசேப்புக்கு கிருபை கிடைத்தது. இன்றைக்கு யாராவது நம்மை இரட்சிக்க மாட்டார்களா? யாராவது நமக்கு விடுதலை அளிக்க மாட்டார்களா? ஏன் தேவ ஜனங்கள் பரிதவிக்கும் சூழ்நிலை இன்றைக்கு நிலவுகிறது இயேசு கிறிஸ்து ஒருவரே நம்மை இரட்சிக்க வல்லவர். அவர் வந்ததன் நோக்கமே உங்களை இரட்சிக்கும்படியாய் தான்.
சங்கீதம் 62:1
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
நம் இரட்சிப்பு அவராலே தான் வரும், கர்த்தர் எதற்காக உங்களுக்கு முன்பதாக போய் கன்மலையின் மேல் நிற்கிறார் என்றால் அவர் உன்னை உயர்த்தும் படியாக, உன்னை நிறுத்தும் படியாக, உன்னை இரட்சிக்கும் படியாக. அவர் நித்ய நித்தியமாய் நம்மோடு கூட இருக்கிறவர். ஆமென்.
No comments:
Post a Comment