Friday, March 10, 2017

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்
Date: 19:02:2017
Speaker: Brother Kamal

Worship : Brother Micheal & Brother Joshua

" நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் "

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

 பயம் என்னும் ஒரு வித இருள் இவ்வுலகை கவ்வி கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனென்றால் உலகை உலுக்கும் தீவிரவாத தாக்குதல்கள், உறைய வைக்கும் குற்ற செயல்கள், கொள்ளை நோய்கள், ஆகியவை யாவும் நாம் இந்த உலகத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்பதை தெளிவாக நமக்கு விளக்குகிறது. நம் தேவனாகிய கர்த்தரின் வருகை மிக சமீபமாய் இருக்கிறது.

கடைசி நாட்களில் சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதை நமக்கு வேடம் முன்னறிவிக்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் கூட யாக்கோபு, எலியா, தாவீது போன்றோரும் சில சூழ்நிலைகளின் நிமித்தம் பயந்தனர். ஆனாலும் கர்த்தர் மீது உள்ள விசுவாசத்தில் அவர்கள் என்றுமே குறைவுபட்டதில்லை. 

நாமும் கூட இப்பொழுது எதிர்படுகிற அல்லது வரும் காலத்தில் எதிர்நோக்கியிருக்கிற காரியங்கள் குறித்து பயந்து கொண்டு இருக்கலாம் ஏனென்றால் பிசாசானவன் நம்மை எப்பொழுது விழுங்கலாம் என்று வகை தேடி சுற்றி கொண்டு இருக்கிறான். எனினும் நாம் பயப்பட தேவை இல்லை இன்றைக்கு உங்களை பார்த்து ஆண்டவர் சொல்கிறதாவது நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன். நம் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருந்து செய்யபோகிறதை இங்கு மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம்.

1. நீ பயப்படாதே உனக்கு கேடகமாய் இருப்பேன் 

ஆதியாகமம் 15:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி நீ பயப்படாதே நான் உனக்கு கேடகமும் மகா பெரிய பலனுமாய் இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இங்கே நாம் பார்க்கும் பொழுது ஆபிராம் எதோ ஒரு விஷயத்தில் பயந்து கொண்டு இருக்கிறார். அவர் எதையோ நினைத்து தன்னுடைய மனதிலே கலங்கி கொண்டிருக்கிறார். கர்த்தர் ஆபிரகாமின் இருதயத்தை அறிந்து இருக்கிறார் எனவே அவருக்கு ஆறுதலாக அபிராமே நீ பயப்படாதே என்று சொல்லுகிறார். ஒரு அன்போடும், ஆறுதலோடும் சொல்லுகிறார். கர்த்தர் ஆபிரகாமின் மனதை அறிந்து நான் உனக்கு கேடகமும், மகா பெரிய பலனுமாய் இருக்கிறேன். இன்றைக்கு உங்களை பார்த்து ஆண்டவர் சொல்கிறதாவது நீ பயப்படாதே நான் உனக்கு கேடகமும் மகா பெரிய பெரிய பலனும்மாய் இருப்பேன் என்று சொல்லுகிறார். 

சங்கீதம் 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

இங்கே தாவீது தன் மகன் அப்சலோமுக்கு பயந்து ஓடிப்போகையில் பாடின சங்கீதம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பே தாவீதின் இந்த சங்கீதத்திற்கு நுழை வாசலாய் இருக்கிறது. அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை பாடியிருப்பார் என்பதை நம்மால் உணர முடிகிறது. தாவீது மிகப்பெரிய நெருக்கத்திலும், தன் இருதயத்தில் ஏற்பட்ட துக்கத்தின் மத்தியில் இந்த சங்கீதத்தை இயற்றியுள்ளார். அவர் இருதயத்தில் துக்கமும், வருத்தமும் இருந்தாலும் அவர் கர்த்தருக்குள் களிகூருவதை தடை செய்யவில்லை. 

தாவீதின் சத்ருக்கள் அவருக்கு விரோதமாய் பேசுகிறார்கள். ஆனால் தாவீதோ கர்த்தரையே நம்பி இருந்தார். அவருடைய சத்ருக்கள் தேவனிடத்தில் அவருக்கு உதவி இல்லை என்று சொன்னார்கள். தாவீதோ உறுதியாக சொல்கிறார் கர்த்தர் என் கேடகமாக இருக்கிறார். என்று விசுவாச அறிக்கை செய்கிறார்.

ஒரு சில சமயங்களில் நம் சூழ்நிலைகளை பார்க்கும் பொழுது அதனை மேற்கொள்ள முடியாமல் சோர்ந்து போய் விடுகிறோம். நமக்கு வேதனை தரும் சூழ்நிலைகளை நோக்கிப்பார்க்காமல் நமக்கு ஆறுதல் தரும் கர்த்தரை நோக்கி நாம் கூப்பிட்டால் அவர் நமக்கு கேடகமாயும், நம் தலையை உயர்த்த வல்லவராயும் இருக்கிறார். 

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

அநேக நெருக்கங்கள் வந்தாலும், அநேக பாடுகள், அநேக உபத்திரவங்கள் வந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம். கர்த்தர் நமக்கு துருகமாவும், கேடகமாவும், உயர்ந்த அடைக்கலமாகவும் இருக்கிறார். அன்று தாவீதுக்கு கேடகமாக இருந்த அதே நம் தேவனாகிய கர்த்தர் இன்று நமக்கும் கேடகமாய் இருக்க வல்லவராயிருக்கிறார். கர்த்தர் நமக்கு கேடகமாக இருப்பதால் சத்ருக்களால் நம்மை தொட முடியாது உங்களை தொடுகிறவர்கள் கர்த்தருடைய கண்மணியை தொடுகிறார்கள் நம்மோடு யுத்தம் பண்ணுகிறவர்கள் கர்த்தரோடு யுத்தம் பண்ணுகிறார்கள். கர்த்தரே நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார் 

சங்கீதம் 91:3
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

சங்கீதம் 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

தம்மை நம்பி இருப்பவர்களை தேவன் எல்லா ஆபத்துகளில் இருந்தும் விடுவிப்பார் இது தேவனுடைய வாக்குத்தத்தம். நம்முடைய ஜீவனை இதுநாள் வரைக்கும் பாதுகாத்து வருபவர் சரீர ஜீவனை மாத்திரம் அல்லாது ஆவிக்குரிய ஜீவனையும் சாத்தானின் சோதனைகளிடமிருந்தும், அந்தகார சக்திகளின் வல்லமைகளில் இருந்தும் தம் தெய்வீக கிருபையால் நம்முடைய ஆவியையும், ஆத்துமாவையும் பாதுகாக்கிறார். அவரை நம்பி இருக்கிற உங்களையும் அவர் தமது சிறுகுகளாலே மூடுவார், நம்மை பாதுகாப்பார். 

2. நீ பயப்படாதே உனக்காக யுத்தம் செய்வேன் 

உபாகமம் 20:1
நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

உபாகமம் 20:4
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

இங்கே இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்ருக்களை பார்த்து பயப்படக்கூடாது. அவர்களின் எண்ணிக்கை பெரிதாக இருக்கலாம். அவர்களிடத்தில் ஏராளமான குதிரையும், இரதங்களும் இருக்கலாம், நீ அதை கண்டு பயப்பட வேண்டாம் என்று மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்கிறார். இன்றைக்கு நாம் அநேக காரியங்களில் யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது நோய்களின் பிடியில் இருந்து விடுபட, பாவத்தில் இருந்து விடுபட, இச்சைகளில் இருந்து விடுபட, ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர தடையாக இருக்கும் காரியங்களில் இருந்து விடுபட, தேவனிடத்தில் இருந்து வரும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள தடையாக உள்ள காரியங்களில் இருந்து விடுபட, இப்படி அநேக காரியங்களில் நாம் யுத்தம் பண்ண வேண்டியிருக்கிறது எனவே இது மாதிரியான சூழ்நிலைகள் வரும்பொழுது பயப்படவேண்டாம்.

கர்த்தர் நமக்காக நம் சத்ருக்களிடம் யுத்தம் பண்ணுவார். சேனைகளின் கர்த்தர் நம்மோட இருக்கிறார் அவர் நமக்கு ஜெயம் கொடுக்கும் கர்த்தர். இனி உங்களுடைய யுத்தம் அவருடைய யுத்தம் எனவே நீங்கள் பயப்படவேண்டாம். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் நீங்கள் சும்மாயிருப்பீர்கள். 

I சாமுவேல் 17:32
தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.

இதுபோலவே தான் நாம் கோலியாத்தை போன்ற காரியங்கள் நம்மை எதிர்த்து வந்தாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை ஏனென்றால் கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கிறார். எனவே நாம் அஞ்ச தேவை இல்லை கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். 

I சாமுவேல் 17:45
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

I சாமுவேல் 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.

I சாமுவேல் 17:47
கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

என்னதான் பிசாசானவன் நம்மை கொள்ளையடிக்க பல்வேறு வழிகளில் வந்தாலும் நாம் அவனை பார்த்து சொல்ல வேண்டியது இவையே இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருவேன் இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார். இன்றைக்கு உங்கள் பெலிஸ்தனை முறியடிக்க நம் தேவனாகிய கர்த்தர் வந்திருக்கிறார், யுத்தம் கர்த்தருடையது எனவே பயப்படாதீர்கள்.
 

3. நீ பயப்படாதே உன்னை தாங்குவேன் 

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

நீங்கள் வாழ்க்கையில் பலவீனத்தோடு போராடி கொண்டிருக்கலாம், எவ்வளவு முயற்சி செய்தும் அதை கட்டுப்படுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். வெகு காலமாக வேலைக்காக போராடி கொண்டு ஒரு உயர்வு இல்லமால் இருக்கலாம், வயதாவதினால் வரும் கஷ்டங்களை நினைத்தும் கவலைப்பட்டு இருக்கலாம். அல்லது வியாதியின் நிமித்தமாக போராடி கொங்கிருக்கலாம்.

நீங்கள் எதை நினைத்து கவலைப்பட்டாலும் சரி, நம் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் நீ பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் நீதியின் வலது கரத்தினால் உன்னை தாங்குவேன் எவ்வளவு ஒரு ஆறுதலான வார்த்தை எந்த பிரச்சினைகள் வந்தாலும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர வேண்டும். 

சங்கீதம் 63:8
என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.


இங்கே தாவீது கர்த்தர் மீது வைத்திருக்கிற தன் விசுவாசத்தை சொல்கிறார். தாவீதின் ஆத்துமா எப்படி கர்த்தரை பற்றி கொண்டு இருந்ததோ அது போல நாமும் கர்த்தரையே பற்றி வாஞ்சையோடு அவரை தேட வேண்டும். அவரை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும், கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியத்தில் இருக்க வேண்டும். அப்பொழுது தேவனுடைய கரம் நம்மை தாங்கும் இது நாள் வரையிலும் நம் கண்மணிபோல் காத்து தாங்கி கொண்டு வருபவர் நம் தேவனாகிய கர்த்தர். ஒரு தகப்பன் சுமப்பது போல் நம்மை கர்த்தர் தாங்குகிறார். உங்கள் பாரங்கள், கவலைகள் யாவற்றையும் கர்த்தர் மேல் வைத்து விடுங்கள் அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் அவர் யஹோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வார் இன்னுமாய் அவரை கிட்டி சேருங்கள் ஆமென். 

No comments:

Post a Comment