Thursday, March 23, 2017

கர்த்தரிடத்தில் திரும்புங்கள்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்
Date: 05:03:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

" கர்த்தரிடத்தில் திரும்புங்கள் "

 யோவேல் 2:12
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

யோவேல் 2:13
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.


இப்பொழுது நாம் வந்திருக்கிற நாட்கள் லெண்ட் டேஸ் என்று சொல்லுவார்கள். அப்படியென்றால் துக்கத்தை அனுசரிப்பதற்கான நாட்கள் ஆகும். பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்கள் இந்த நாட்களை அனுசரிக்கலாமா என்ற ஒரு கேள்வி பரவலாக நிலவுவதை நாம் காணமுடியும். ஆவிக்குரிய ரீதியில் உள்ள நாம் எப்படி அதை அனுசரிப்பது என்று பார்த்தோம் ஆனால் யோவேல் 2:12 இல் வேதம் தெளிவாக சொல்கிறது ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

புதிய திட்டங்கள் அதாவது ஜெப நேரங்களை அதிகரித்து கொள்வது, வேத வாசிப்பை அதிகரித்து கொள்வது, இத்தனை மணி நேரம் நான் ஜெபிப்பேன், இத்தனை மணி நேரம் வேதம் வாசிப்பேன் என்ற புதிய தீர்மானங்களை எடுத்து கர்த்தரோடு இருக்கும் ஐக்கியத்தை பலப்படுத்த வேண்டும். நம்முடைய ஆதி அன்பை நாம் எப்பொழுதும் விட்டு விடக்கூடாது. கர்த்தரிடத்தில் நாம் முழு இருதயத்தோடு திரும்ப வேண்டும். நாம் அவரிடத்தில் திரும்ப வேண்டும் என்பது கர்த்தருடைய வாஞ்சையாய் இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் நாம் கர்த்தரிடத்தில் திரும்பும் பொது நாம் பெற்றுக்கொள்ளப்போகும் ஐந்து ஆசீர்வாதங்களை நாம் இங்கு காணலாம். 

யோவேல் 2:14
ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.

நாம் கர்த்தரிடத்தில் திரும்பும் பொழுது அவர் நம் மேல் மனஸ்தாபப்பட்டு நமக்கு ஆசிர்வாதத்தை தந்தருளுவார். எதற்காக நாம் கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும், அவ்வாறு திரும்புவதால் வரும் ஆசீர்வாதங்களை. 

1. கர்த்தரிடத்தில் நாம் திரும்பும் பொழுது அக்கிரமங்கள் நீங்குகிறது 

ஓசியா 14:1
இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.

ஓசியா 14:2
வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.

நாம் கர்த்தரிடத்தில் திரும்பும் பொழுது நமக்கு கிடைக்கும் பெரிதான ஆசீர்வாதங்கள் என்னவென்றால் நம்முடைய அக்கிரமங்கள் நீங்குகிறது. நம்முடைய அக்கிரமங்கள் என்று சொல்லும் பொழுது நாம் சிறு வயது முதல் இந்நாள் முதற்கொண்டு செய்ததான அக்கிரமங்கள், நம்முடைய பாவங்கள் மற்றும் நம் பெற்றோர், மூதாதையர் பாவ, சாபங்களும் நீங்குகிறது.

நம்முடைய அக்கிரமங்கள் நீங்கும் பொழுது நமக்கு கிடைப்பதான காரியங்கள் என்னவென்றால் இரட்சிப்பு கிடைக்கிறது, பரிசுத்தமான வாழ்வு கிடைக்கிறது, இயேசுவின் செல்ல பிள்ளை என்ற அங்கீகாரம் கிடைக்கிறது, பரலோக வாழ்வு நமக்கு கிடைக்கிறது அது மாத்திரம் அல்லாமல் நித்ய ஜீவனை நம் தேவன் நமக்கு தருகிறார். 

அக்கிரமங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்றால் ஓசியா 14:2 இல் வசனம் இவ்வாறாக சொல்கிறது வார்த்தைகளை கொண்டு நாம் கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் நாம் செய்த பாவங்களை நாம் கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு மனம் திரும்ப வேண்டும் அவ்வாறு நாம் திரும்பும் பொழுது கர்த்தர் நம்மை மன்னித்து பரிசுத்தப்படுத்துகிறார். 

2. கர்த்தரிடத்தில் நாம் திரும்பும் பொழுது கிருபை கிடைக்கிறது 

எரேமியா 3:12
நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.

இன்றைக்கு உங்களை பார்த்து கர்த்தர் சொல்கிறதாவது இஸ்ரவேலே திரும்பு, கர்த்தர் கிருபையுள்ள தேவன். தம் பிள்ளைகளாகிய உங்கள் மேல் தன் கோபத்தை வைக்க மாட்டார். எனவே நீங்கள் கர்த்தரிடத்தில் திரும்பும் பொழுது அவருடைய பெரிதான கிருபை நமக்கு கிடைக்கிறது.
 

3. கர்த்தரிடத்தில் நாம் திரும்பும் பொழுது நல்ல மேய்ப்பர்களை தருவார் 

எரேமியா 3:14
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டு வந்து,

எரேமியா 3:15
உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.

என்னிடம் திரும்பி வாருங்கள்!” என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களுக்கு மேய்ப்பர்களை தருவேன். அந்த மேய்ப்பர்களை எனக்கு விசுவாசமாக இருப்பார்கள். உங்களை அவர்கள் அறிவோடும் கூர்ந்த உணர்வோடும் வழிநடத்திச் செல்வார்கள்.

கர்த்தர் நம் மேய்ப்பராயிருக்கிறார். மேய்ப்பனானவர் எப்பொழுதும் தன் மந்தையின் ஆடுகளின் மீது கண்ணோக்கமாய் இருப்பார். அது போலவே தான் கர்த்தர் நம் மேல் வைத்த பேரன்பின் நிமித்தமாக நம் மேய்ப்பராய் இருக்கிறார். நமக்கு கர்த்தர் நல்ல மேய்ப்பனாய் இருக்கிறார். 

4. கர்த்தரிடத்தில் நாம் திரும்பும் பொழுது இளைப்பாறுதல் கிடைக்கிறது 

எரேமியா 4:1 
இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.

நீங்கள் மனம் திரும்ப மனதாய் இருந்தால் என்னிடம் வாருங்கள் என்று கர்த்தர் அழைக்கிறார். அவர் உங்கள் அருவருப்புகளை உங்களை விட்டு அகற்றி இளைப்பாறுதல் தருவார். நீங்கள் இனி அலைந்து திரிவதில்லை.

5. கர்த்தரிடத்தில் நாம் திரும்பும் பொழுது சீர்கேடுகளை குணமாக்குவார் 

எரேமியா 3:22
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்

நமக்கு வரும் வியாதிகளில் பல முகாந்திரம் இல்லாமல் வருகிறது அது நம்முடைய அல்லது நம் மூதாதையர்களின் சீர்கேடுகள் நிமித்தமாக வருகிறது. எனவே நம் ஜீவியத்தில் உள்ள சீர்கேடுகளை நாம் ஆராய்ந்து பார்த்து அவற்றிலிருந்து விலகி கர்த்தரிடத்தில் திரும்புவோம் ஆனால் நம் சீர்கேடுகளை குணமாக கர்த்தர் வல்லவராய் இருக்கிறார். ஆமென் .

No comments:

Post a Comment