Thursday, May 4, 2017

சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு,

கன்மலை சபை 10 ஆம் ஆண்டு விழா 
Date: 23:04:2017
Speaker: Pastor L. Arokianathan

Worship : Brother Micheal & Brother Joshua

வெளி 1:1
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

சீக்கிரத்திலே இந்த ஒன்பது வருடங்கள் நடத்தி வந்த தேவன் பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிற இந்த சபையை குறித்து ஆண்டவர் சொல்கிறதாவது சீக்கிரத்திலே எதையோ தேவன் இந்த சபைக்கு செய்யப்போகிறார். உங்களுக்காக செய்யப்போகிறார், தீவிரமாக செய்யப்போகிறார். ஒன்பது ஆண்டுகள் கடந்து வந்த எல்லா பாடுகளுக்கும், எல்லா துக்கங்களுக்கும், எல்லா போராட்டங்களுக்கும், ஒரு முடிவு கொடுக்கிற வருடம் தான் இந்த பத்தாம் வருடம். சீக்கிரத்தில் உங்களுக்கு சம்பவிக்க போகிறதை தம்முடைய ஊழியக்கரானாகிய எனக்கு காண்பித்து இருக்கிறார்.


வெளி 22:6
பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

அவர் காண்பித்தார் இந்த கன்மலை கிறிஸ்துவ சபைக்காக தேவன் ஆச்சிரியமான காரியத்தை சீக்கிரத்தில் செய்து முடிக்கப்போகிறார். இந்த சபைக்கு சீக்கிரத்தில் சம்பவிக்க இருக்கிறதை தம்முடைய ஊழியக்காரனாகிய எனக்கு காண்பித்தார். எனக்கு காண்பிக்கப்பட்ட ஐந்து காரியங்களை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். 

1. சீக்கிரத்திலே உன் சுக வாழ்வு துளிர்க்கும் 

ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கபோகிறது. உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சீக்கிரத்தில் ஒரு சுக வாழ்வு துளிர்க்கபோகிறது. பட்டுப்போன மரமாய் உங்கள் வாழ்க்கை இருக்கலாம். இத்தனை ஆண்டுகள் ஆண்டவரை தேடியும் எந்த ஒரு சுகத்தையும் நான் காணவில்லை என்ற நிலையில் இருக்கலாம். தீமையை அனுபவித்த நாட்களை பார்க்கிலும் நன்மை அனுபவித்த நாட்கள் வெகு சில நாட்கள் ஆனால் கர்த்தருடைய வார்த்தை சீக்கிரத்தில் உங்கள் சுக வாழ்வு துளிர்க்கபோகிறது நீங்கள் பூத்து குலுங்க போகிறீர்கள், நீ பட்ட மரமாக அல்ல வசனம் சொல்கிறது சீக்கிரத்தில் உன் சுக வாழ்வு துளிர்க்கும் இன்றைக்கு நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் வெகு சீக்கிரத்திலே ஒரு சுகமான வாழ்வுக்குள்ளே நீங்கள் பிரவேசிக்கப்போகிறீர்கள்.

நீ பட்ட பாடுகளுக்கும், விட்ட கண்ணீருக்கும், பட்ட அவமானகளுக்கும் ஒரு முடிவு வந்து விட்டது. இந்த பத்தாம் ஆண்டிலே ஆண்டவர் உங்களைப்பார்த்து சொல்கிறார் இந்த கன்மலை கிறிஸ்துவ சபைக்கு சீக்கிரத்திலே ஒரு சுக வாழ்வை கட்டளையிட போகிறார். இனி துக்கத்தின் வாழ்வு அல்ல நீ சுகமாய் வாழ்ந்திருக்க போகிறாய். வசனம் சொல்கிறது பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்க போகிறீர்கள்.

2. சீக்கிரத்திலே கர்த்தர் நியாயம் செய்வார் 

லூக்கா 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

லூக்கா 18:8
சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

உங்களுக்கு பல வருடங்களாக வழக்குகள் ஒரு முடிவு இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வரலாம். இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு நியாயம் செய்யப்போகிறார். உங்களோடு போராடினவர்களை தேடியும் காணாதிருப்பீர்கள். உனக்கு வயதாகி விட்டது என்று கலங்காதே நீ இந்த பூமியில் வாழும் காலத்திலேயே கர்த்தர் உனக்காக நியாயம் செய்வார். சீக்கிரத்தில் செய்யப்போகிறார். உன் விஷயத்தில் அவர் நீடிய பொறுமையாய் இருந்து விட்டார். இந்த கன்மலை கிறிஸ்துவ சபைக்காக இந்த பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற உங்களுக்கு தேவன் சீக்கிரத்தில் நியாயம் செய்ய போகிறார். அதை உங்கள் கண்கள் காணப்போகிறது. உன் வேலைஸ்தலத்தில் நியாயம் செய்யப்போகிறார், உன் குடும்பத்தில் நியாயம் செய்யப்போகிறார் அவர் நியாதிபதி, சர்வ லோக நியாதிபதி, அவர் நியாயம் செய்யாமல் இருப்பாரோ, ஒடுக்கப்படுகிற யாவருக்கும் கர்த்தர் நீதியையும், நியாயத்தையும் செய்ய வல்லவராய் இருக்கிறார்.
 

3. சீக்கிரத்திலே உன் காரியத்தை நிறைவேற்றுவார் 

ரோமர் 9:28
அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.

ரோமர் 9:29
அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் கர்த்தர் உங்கள் காரியத்தை சீக்கிரம் நிறைவேற்ற போகிறார். திருமண காரியமாக இருக்கலாம், உங்கள் பிள்ளையின் வேலையின் காரியமாக இருக்கலாம், உங்கள் பிள்ளைகளின் படிப்பின் காரணமாக இருக்கலாம். எந்த காரியமோ அதை சீக்கிரத்தில் கர்த்தர் செய்து முடிக்க போகிறார். சீக்கிரமாகவே நீ எதிர்பார்க்கும் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார். எத்தனையோ வருடம் நடக்காத காரியம் இந்த பத்தாம் ஆண்டில் நிறைவேற்றப்போகிறார்.

ஆதியாகமம் 41:32
இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.

இந்த சபைக்காக கர்த்தர் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். அதை சீக்கிரத்தில் முடிப்பார். சொந்த இடத்தில சபை கட்டப்பட தேவன் கிருபை செய்வார். திருமண காரியமோ, வேலையின் காரியமோ, எந்த காரியமாக இருக்கட்டும் கன்மலை சபைக்கு சில காரியங்களை சீக்கிரத்தில் செய்யப்போகிறார். சீக்கிரத்திலே உன் காரியத்தை நிறைவேற்றுவார். 

4. சீக்கிரத்திலே உனக்கு சந்தோஷம் கொடுப்பார் 

லூக்கா 19:5
இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.

லூக்கா 19:6
அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.

இன்றைக்கு கர்த்தர் உங்கள் வீட்டுக்கு வரப்போகிறார். சந்தோஷத்தை கொடுக்கப்போகிறார். உன் வீடு இது நாள் வரையிலும் கண்ணீரின் வீடாய் இருக்கிறது. துக்கத்தின் வீடாய் இருக்கிறது, போராட்டம், பிரச்சினை, சண்டை, குழப்பம், ஆனால் இயேசு சொல்கிறார். சீக்கிரமாய் உங்க வீட்டில் தங்கப்போகிறேன். சீக்கிரத்திலே உனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கப்போகிறார். 

சங்கீதம் 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

எனக்கு போராட்டம், பிரச்சினை வேண்டாம் சீக்கிரமாய் எனக்கு செவிகொடும் இனி உன் வாழ்க்கையில் துக்கம் என்பது இருக்கவே இருக்காது. குடிகார கணவனை கர்த்தர் மாற்றுவார். குழப்பங்களை மாற்றுவார், உன் நிம்மதியை கெடுப்பவைகளை மாற்றி ஒரு சந்தோஷத்தை தரப்போகிறார். 

5. சீக்கிரத்திலே சாத்தானை நசுக்கிப்போடுவார்

ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

எந்த சாத்தான் உன்னை தலை தூக்காத படி ஆட்டிப்படைக்கிறானோ அந்த சாத்தானை கர்த்தர் சீக்கிரத்தில் நசுக்கி போடுவார். எல்லா வித சாத்தான்களிடம் இருந்தும் கர்த்தர் விடுதலையை தரப்போகிறார். 

II சாமுவேல் 5:26
தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து, தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.

சீக்கிரத்திலே கர்த்தர் சாத்தானை அழிப்பார் உங்களுக்கு ஜெயத்தை கொடுப்பார். சீக்கிரத்திலே உன் சுக வாழ்வு துளிர்க்கும், சீக்கிரத்திலே கர்த்தர் நியாயம் செய்வார், சீக்கிரத்திலே உன் காரியத்தை நிறைவேற்றுவார், சீக்கிரத்திலே உனக்கு சந்தோஷம் கொடுப்பார், சீக்கிரத்திலே சாத்தானை அழித்து உனக்கு ஜெயத்தை தரப்போகிறார் நம்முடைய தேவன் ஜெய கிறிஸ்து சீக்கிரத்திலே உங்களுக்கு இந்த ஐந்து காரியங்களை செய்வேன் என்று தன் ஊழியக்காரனாகிய எனக்கு வெளிப்படுத்தினார். 

No comments:

Post a Comment